சென்னை: தமிழ் சினிமா மட்டுமின்றி, இந்திய சினிமா அளவில் சிறந்த நடிகர் என்று பெயர் பெற்றவர் விஜய் சேதுபதி. சாதாரண துணை கதாபாத்திரங்களில் நடித்து தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார். இவரது 50வது படமான மகாராஜா சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய மகாராஜா வித்தியாசமான திரைக்கதையின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. விஜய் சேதுபதி, சிங்கம்புலி, ஒளிப்பதிவாளர் நட்டி, அனுராக் காஷ்யப் ஆகியோரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் ஏற்கனவே தான் இயக்கிய முதல் படமான 'குரங்கு பொம்மை' மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். குரங்கு பொம்மை போன்று இந்த படமும் வித்தியாசமான திரைக்கதைக்காக பேசப்பட்டது. சாதாரண பழிவாங்கும் கதையில் காலத்தை வைத்து நித்திலன் செய்த மேஜிக் தியேட்டரில் காண்போரை சீட் நுனியில் அமர வைத்தது. ஃபேஷன் ஸ்டூடியோஸ் சுதன் தயாரிப்பில் வெளியான விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா அவரது திரை வாழ்வில் மைல்கல்லாக அமைந்தது.
இந்நிலையில், இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும், இதில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் அமீர் கான் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து இப்படத்தை தயாரித்த ஃபேஷன் ஸ்டூடியோஸ் சுதனிடம் ஈடிவி பாரத் தொடர்புகொண்டு கேட்டபோது, "இந்தி ரீமேக் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை" என்று தெரிவித்துள்ளார். மகாராஜா படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பலத்த போட்டி நிலவி வரும் நிலையில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: செம்பருத்தி டீயால் வந்த பிரச்னை.. டாக்டரின் பதிவிற்கு நயன்தாரா சூசக பதில்! - NAYANTHARA Hibiscus Tea issue