சென்னை: அறிவழகன் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சாட்டை. இப்படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா, மகிமா நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் ஹீரோவாக பள்ளி மாணவராக அறிமுகமானவர் நடிகர் யுவன். சமுத்திரகனி பள்ளி ஆசிரியராக நடித்த இப்படம் அரசுப் பள்ளிகள் எப்படிச் செயல்பட வேண்டும் என்று விழிப்புணர்வு படமாக அமைந்தது.
படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில், யுவனுக்கு அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கிடைத்தது. சாட்டை படத்தைத் தொடர்ந்து அடுத்த சாட்டை, கமர்கட்டு, கீரிப்புள்ள, இளமி, அய்யனார் வீதி போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். அப்படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து இயக்குநர் பாலாவின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாயிருந்தார்.
ஒரு சில காரணங்களால் அப்படமும் கைவிடப்பட்டது. அப்படத்திற்காகப் பரோட்டா தயாரிக்கக் கற்றுக்கொண்டவர், தற்போது ஒரு ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக பணி புரிந்து வருவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இவரது இயற்பெயர் அஜ்மல் கான். இவருடைய தந்தை பிரோஸ் கான் ஒரு தொழிலதிபர். இவரும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் யுவன் என்கிற அஜ்மல் கானுக்கும், கும்பகோணம் தங்க விலாஸ் அதிபர் சாதிக் அலி மகள் ரமீசா கஹானிக்கும் இன்று திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி விஜிபி ரீசார்ட்டில் மிகப் பிரமாண்டமான மேடை அமைத்து அதில் திரளான மக்கள் முன்னணியில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் ஏராளமான அரசியல் பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில், அரசியல் பிரமுகர் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், விஜிபி அதிபர் சந்தோசம், கிளாரியன் பிரஸிடென்ட் ஹோட்டல் அதிபர் அபூபக்கர் மற்றும் திரையுலக பிரமுகர்கள் மன்சூர் அலிகான், ரியாஸ்கான், உமா ரியாஸ்கான், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, மிஸ் இந்தியா சினேகா மற்றும் பல தொழிலதிபர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நடிகர் யுவன் என்கிற அஜ்மல் கான், ரமீசா கஹானி திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: காதலர் தினத்தைக் கொண்டாடிய நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி! எனது தங்கத்துடன் ஒரு தசாப்தம்..