சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம், பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. லால் சலாம் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும், படத்தில் கதாநாயகர்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் கதாநாயகியாக தன்யா பாலகிருஷ்ணா நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
இந்த நிலையில், லால் சலாம் திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி, இப்படத்திற்கு தடை விதித்து, நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா, நடிகை தன்யா பாலகிருஷ்ணா படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், “லால் சலாம் திரைப்படத்தில் கதாநாயகியாக கர்நாடகாவைச் சேர்ந்த தன்யா பாலகிருஷ்ணா நடித்துள்ளார். இவர் சில தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். இந்த நிலையில், தன்யா பாலகிருஷ்ணா சில வருடங்களுக்கு முன்பு சமூக வலைத்தளப் பக்கத்தில் தமிழர்களை மிக கேவலமான வார்த்தைகளைப் பயன்படுத்தி கொச்சைப்படுத்தி பதிவிட்டு உள்ளார்.
அந்த பதிவில், ‘அன்புள்ள சென்னை, நீங்கள் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறீகள், நாங்கள் கொடுக்கிறோம். மின்சாரத்துக்காக பிச்சை எடுக்கிறீகள், நாங்கள் கொடுக்கிறோம். உங்களுடைய மக்கள் எங்களுடைய அழகான நகரத்துக்கு வந்து, அதனை ஆக்கிரமித்து கொச்சைப்படுத்துகிறார்கள். டேய் உங்களுக்கு வெட்கமே இல்லையாடா’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் துணை நடிகை தன்யா பாலகிருஷ்ணா போட்ட பதிவு வைரலாகி, தமிழர்களான எங்களது உணர்வை மிகவும் பாதித்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே, துணை நடிகை தன்யா பாலகிருஷ்ணா கதாநாயகியாக நடித்துள்ள லால் சலாம் படத்தை வெளியிட்டால், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, லால் சலாம் படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தடை விதிக்க வேண்டும். மேலும், தமிழ் மக்களின் மனதை புண்படுத்தவும், அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களின் மத்தியில் கலகத்தை உண்டு பண்ணும் நோக்கத்தில் துணை நடிகை தன்யா பாலகிருஷ்ணாவை வேண்டுமென்றே இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்துள்ள லால் சலாம் படத்தின் இயக்குநரும், நடிகர் ரஜினிகாந்த்தின் மகளுமான ஐஸ்வர்யா மீதும், லால் சலாம் படத்தை தயாரித்த லைக்கா தயாரிப்பு நிறுவன உரிமையாளர் சுபாஷ்கரன் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்” என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் களமிறங்கிய விஜய்.. கொள்கை, திட்டம் என்ன?