சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், “இன்றைய காலகட்டத்தில் ஒரு சில நடிகர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஏற்கனவே அட்வான்ஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனத்தின் திரைப்படங்களுக்கு பணிபுரியாமல் புதியதாக வரும் திரைப்பட நிறுவனங்களுக்குச் சென்று விடுகிறார்கள்.
இதனால் ஏற்கனவே அட்வான்ஸ் கொடுத்துள்ள தயாரிப்பாளர்கள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்திக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆகையால், இனிவரும் காலங்களில் எந்த ஒரு நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களும் தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்றிருந்தால், அந்த திரைப்படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்த திரைப்படங்களின் பணிகளுக்குச் செல்ல வேண்டும்” என்று கூட்டத்தில் பேசி முடிக்கப்பட்டது.
மேலும், “பல திரைப்படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் தேங்கி நிற்கும் நிலையை மாற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட உள்ளது. அந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பிறகு படப்பிடிப்புகள் தொடங்கலாம் என்பதால், வருகின்ற 16.8.2024 முதல் புதிய திரைப்படங்கள் துவங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது” என்று கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆகையால், “தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்புகளை வருகின்ற அக்டோபர் 30ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ளுமாறு தயாரிப்பாளர்களை கேட்டுக்கொள்கிறோம். நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம் மற்றும் இதர செலவுகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டிருப்பதால், அதை முறைப்படுத்த பல்வேறு முயற்சி செய்து தமிழ் திரைத்துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டியுள்ளது. அதனால் வருகின்ற 01.11.2024 முதல் தமிழ் சினிமாவின் அனைத்து விதமான படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளும் நிறுத்தப்படும் என கூட்டத்தில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்க தீர்மானம் குறித்து தயாரிப்பாளர் திருமலை ஈடிவி பாரத் செய்திகளிடம் தெரிவித்ததாவது, “தனுஷ் விவகாரத்தில் சங்கம் ஒரு முடிவு எடுத்துள்ளனர். போகப்போக அனைத்து தரப்பினரும் இணைந்து கலந்து பேசி சுமூக முடிவு எடுப்பார்கள். அதேபோல், விஷால் விவகாரத்தில் சங்கத்தின் பணம் விரயம் செய்யப்பட்டுள்ளது.
விஷால் செய்த தவறுகளை சரி செய்ய கேட்கிறோம், ஆனால் அவர் வரவில்லை. அதனால் பொதுக்குழு மற்றும் செயற்குழு முடிவு எடுத்துள்ளது. எந்த நடிகர்களாக இருந்தாலும் நடைமுறைப்படுத்தி ஒரு பிரச்னையில் இருந்து வெளிவர வேண்டும். சங்கத்தின் பணத்தை எடுத்து யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்றால் எதற்கு பொதுக்குழு என்று உள்ளது? விஷால் செய்தது தவறு, அதை சரி செய்ய வேண்டிய கடமை அவருக்கு உள்ளது என்றார். மேலும், ஆகஸ்ட்16ஆம் தேதி முதல் புதிய படங்களின் படப்பிடிப்பு நடக்காது என்று தீர்மானம் நிறைவேற்றியிருப்பது அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நட்டம் தான்.
இதனை சரி செய்வதற்காக நடப்பு தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்டவை இணைந்து இந்த முடிவு எடுத்துள்ளனர். தனுஷ் விவகாரத்தில் தயாரிப்பாளர் புகார் இல்லாமல் எப்படி சங்கம் நடவடிக்கை எடுக்கும்? தயாரிப்பாளர்களுக்கு வருமானம் இல்லாமல் அப்படியே விட்டுவிட்டுச் சென்று விடுகின்றனர். தயாரிப்பாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது குறித்து யாரும் சிந்திப்பதில்லை.
இந்த நான்கு மாதங்களில் அனைத்தும் சரி செய்துவிட்டு, அனைவருக்கும் வருமானம் வரும் வழியை உருவாக்கி விட்டு படப்பிடிப்பு தொடங்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். இது விஜயின் அடுத்த படத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு, நடிகர் சங்கம் உள்பட அனைத்து சங்கங்களும் இணைந்து பேசி இந்த முடிவு எடுப்பார்கள்” என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: இந்தியில் ரீமேக் ஆகிறதா மகாராஜா? தயாரிப்பாளர் சொல்வது என்ன? - maharaja hindi remake