சென்னை: விவேக் குமார் கண்ணன் இயக்கத்தில் ஜாக்கி ஷெராஃப், சன்னி லியோன், பிரியாமணி, சாரா அர்ஜுன் மற்றும் பலர் நடித்துள்ள 'கொட்டேஷன் கேங்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி மேடையில் நடிகை ப்ரியாமணி பேசுகையில், “இந்த டிரெய்லர் விழாவுக்கு வந்ததற்கு ரொம்ப சந்தோசம். லாக் டவுன் நேரத்தில் இயக்குநர் விவேக் வேறு ஒரு கதையைச் சொன்னார். எனக்கு ரொம்ப பிடித்தது. பிறகு, ஜூம் (Zoom) காலில் வந்து இந்த கதையைச் சொன்ன போது ஒரு கிக் இருந்தது. அதனால் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
இந்த படத்தில் நிறைய சண்டை காட்சிகள் எனக்கு தான் இருந்தது. அதை ஒரே ஷாட்டில் எடுத்ததாகவும், இதில் எனக்கும், அக்ஷயாவுக்கும் தான் நிறைய காட்சிகள் இருக்கிறது என பேசினார். அதனைத் தொடர்ந்து, நடிகை சன்னி லியோனைப் பற்றி பேசிய அவர், எல்லோருக்கும் அவங்களைப் பற்றி ஒரு இமேஜ் இருக்கும். இந்த படம் வந்த பிறகு அந்த இமேஜ் மாறும் எனவும், சன்னி லியோன் கதாபாத்திரத்தில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்றும், படத்தை தியேட்டரில் பார்த்து ஆதரவு தர வேண்டும் என்றும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் நடிகை சன்னி லியோன் பேசுகையில், “தினமும் என்னிடம் கதை சொல்ல நிறைய இயக்குநர்கள் வருவார்கள். அவர்கள் எல்லோரும் இது என்னுடைய பிம்பத்தை மாற்றும் என்று கூறுவார்கள். அதைக் கேட்கும் போது சந்தோஷமாக இருக்கும். ஆனால், யாரோ ஒருவர் தான் அதை செய்வார்கள். என்னுடைய பிம்பத்தை மாற்றுவார்கள். நான் யார் என்பதை மாற்றுவார்கள். என்னை நம்பி எனக்காக ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கியதற்காக நன்றி. என்னுடைய வீட்டிற்கு வந்து இந்த கதையின் ஒவ்வொரு பகுதியையும் சொல்லியது அற்புதமாக இருந்தது” என்றார்.