சென்னை: பிரபல நடிகை நயன்தாரா வாழ்க்கை தொடர்பான ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். கடந்த 2015இல் வெளியான 'நானும் ரௌடி தான்' படத்தின் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார். இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அட்லீ உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த பிரபல ஜோடிக்கு உயிர், உலகு என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நயன்தாரா திருமண வீடியோவை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த வீடியோவை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார் என கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து வரும் நவம்பர் 18ஆம் தேதி நயன்தாரா பிறந்தநாளன்று நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில் நயன்தாரா வாழ்க்கை தழுவி உருவாக்கப்பட்டுள்ள ஆவணப்படம் 'Nayanthara Beyond the fairy tale' வெளியாகிறது. இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி பெற்ற படங்களில் காட்சிகளோடு தொடங்கும் டிரெய்லரில் உபேந்திரா, நாகார்ஜுனா, ராணா, ராதிகா சரத்குமார் ஆகியோர் அவரை பற்றி பேசுகின்றனர். அதனைத்தொடர்ந்து நயன்தாரா தனது திரை வாழ்வில் கடந்து வந்த கடினமான பாதை குறித்து கண்ணீர் மல்க பேசுகிறார்.
இதையும் படிங்க: கங்குவா, அஜித் கனெக்ஷன், மிரளவைத்த சூர்யா நடிப்பு... கங்குவா ஒளிப்பதிவாளர் வெற்றி எக்ஸ்குளூசிவ் பேட்டி!
பின்னர் விக்னேஷ் சிவன், நானும் ரௌடி தான் படத்தில் தாங்கள் காதலித்தது குறித்தும், அவர்களது திருமணம் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். நயன்தாராவின் வாழ்க்கை தொடர்பான ஆவணப் படம் வரும் நவம்பர் 18ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதனை காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்