சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் கோட் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், வருகின்ற ஜூலை 27ஆம் தேதி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நடத்தும் இசை நிகழ்ச்சி (Live in concert) சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், இசை நிகழ்ச்சியை நடத்தும் நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தினர் மற்றும் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பேசியதாவது, "35க்கும் மேற்பட்ட பாடல்களை இந்த இசை நிகழ்ச்சியில் பாடவுள்ளதாகவும், அதேபோன்று இந்த இசை நிகழ்ச்சியில் 'தி கோட்' திரைப்படத்தில் இருந்து சின்ன சின்ன கண்கள் பாடலை பாட உள்ளதாகவும் தெரிவித்தார். கோட் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் அதற்குள் வெளியானால் அந்த பாடலையும் இசை நிகழ்ச்சியில் பாடுவேன் என்று தெரிவித்தார்.
மேலும், சின்ன சின்ன கண்களை பாடலை பெங்களூரில் கம்போஸ் செய்தேன். இந்த பாடலை நானும், வெங்கட் பிரபுவும் பவதாரணி தான் பாட வேண்டும் என்று முடிவு செய்தோம். ஆனால், அந்த நேரத்தில் பவதாரணி மருத்துவமனை சிகிச்சையில் இருந்தார். அவர் உடல்நிலை சரியாகி வந்த பிறகு அவரை பாட வைக்கலாம் என்று நினைத்தோம். ஆனால், அதற்குள் தான் அப்படி ஆகிவிட்டது. பின்பு என்ன செய்வதென்று யோசித்த போது, அந்த நேரத்தில் தான் லால் சலாம் திரைப்படத்தில் பம்பா பாக்யாவின் குரலை ஏஐ தொழில்நுட்பத்தைக் கொண்டு ஏஆர் ரஹ்மான் பயன்படுத்தி இருந்தார்.
பின்பு அந்த குரலுக்காக பிரியங்காவை பாட வைத்து ஏஐ கொண்டு பவதாரணி குரலாக பயன்படுத்தினோம். எனது தந்தை இளையராஜா மீது வைக்கப்படும் விமர்சனங்கள் எதுவும் என்னை புண்படுத்துவது இல்லை. ஒருவருக்கு ஒரு பாடல் பிடிக்கவில்லை என்றால், அதில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் படித்து நான் முன்னோக்கி செல்வேன். மங்காத்தா 2 திரைப்படத்தில் நீங்கள் இசையமைப்பீர்களா என்ற கேள்விக்கு, படத்தை யார் தயாரிக்கிறார்கள், இயக்குனர் யார் என்று தெரிந்தால், அவர்கள் என்னை இசைமைப்பாளராக தேர்ந்தெடுத்தால் இசையமைப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சுதந்திர தின ரேசில் ஜெயிக்கப் போவது யார்? ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் 4 படங்கள்! - August 15 Release Tamil Movies