சென்னை: தமிழ் சினிமாவில் சாமானிய மனிதர்களின் யதார்த்தமான கதைகளையும், உணர்வுகளையும் அதன் உண்மைத் தன்மை மாறாமல் கூறுவதில் பெயர் பெற்றவர் சீனு ராமசாமி. இவரது படங்கள் மனித உணர்வுகளை பேசும் படங்களாக இருக்கும். இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சீனு ராமசாமி இயக்கிய தர்மதுரை இன்றளவும் கிளாசிக் திரைப்படமாக பார்க்கப்படுகிறது.
தற்போது அறிமுக நாயகன் ஏகன், யோகிபாபு, சகாயபிரிகிடா, லியோ சிவகுமார், ஐஸ்வர்யா தத்தா, சத்யாதேவி, குட்டிப்புலி தினேஷ்குமார், ஆகியோர் நடிப்பில் 'கோழிப்பண்ணை செல்லதுரை' என்ற படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு என். ஆர்.ரகுநந்தன் இசையமைக்க அசோக் குமரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் 'விஷன் சினிமா ஹவுஸ்' டாக்டர் அருளானந்து தயாரித்துள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் அமெரிக்காவில் நடைபெறும் ஆக்லெண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படுகிறது. செப்டம்பர் 12 முதல் 21ஆம் தேதி வரை நடைபெறும் இத்திருவிழாவில் 18ஆம் தேதி இரவு 8.00 மணிக்கு கோழிப்பண்ணை செல்லதுரை ‘வோர்ல்டு ப்ரீமியர்’ அந்தஸ்தில் திரையிடப்படுகிறது. 22 ஆண்டுகளாக நடைபெறும் ஆக்லெண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவில் திரையிடப்படும் முதல் திரைப்படம் என்ற பெருமையை கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் பெற்றுள்ளது.
'கோழிப்பண்ணை செல்லதுரை' திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக, இரு நாள் முன்பாக அமெரிக்காவில் புகழ் வாய்ந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவது பெருமையாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்து தெரிவித்தார். ஏற்கனவே மாமனிதன் திரைப்படம் விருது விழாக்களில் கலந்து கொண்டு விருதுகள் குவித்த நிலையில் இப்படமும் அதேபோல் பல்வேறு பாராட்டுக்களையும், விருதுகளையும் குவிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: “எவ்வளவு பெரிய ஃப்ராடு என்பது ஊருக்கே தெரியும்..” ஸ்ரீ ரெட்டி பரபரப்பு பதிவு! - Sri reddy