சென்னை: நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக அறியப்படுபவர். தமிழில் புதிய விஷயங்களைக் கொண்டுவருவதில் முன்னோடியாகப் பார்க்கப்படுபவர். இவர் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். இது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 28 ஆண்டுகளுக்கு முன் வெளியானது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் வாரியாக மிகப் பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. இதில் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் கமல் கலக்கியிருப்பார். ஊழலுக்கு எதிராகப் போராடும் சுதந்திரப் போராட்ட வீரர் இந்தியன் தாத்தாவாக கமல் ரசிகர்களைக் கவர்ந்திருப்பார். மேலும், இந்த இந்தியன் தாத்தா தவறு செய்வது சொந்த மகனாகவே இருந்தாலும் தண்டனை தான் சரியான தீர்வு என எண்ணும் சுதந்திரப் போராட்ட வீரராக தன்னை காட்டியிருப்பார்.
வசூல் ரீதியாக இந்த படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 மற்றும் 3ஆம் பாகங்கள் உருவாகி வருகிறது. அடுத்த மாதம் இந்தியன் 2 வெளியாக உள்ள நிலையில், இன்று இந்தியன் திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதை கமல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னை கமலா திரையரங்கில் நடிகர் ரோபோ சங்கர், கமல் ரசிகர்கள் உடன் இணைந்து இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதை திரையரங்குக்கு வெளியே மிகப்பெரிய பேனர் வைத்தும், திரையரங்கு உள்ளேயே புஷ்வானம் வைத்தும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்தியன் 2 பட வெளியீட்டுக்கு ஆர்வமுடன் ரசிகர்கள் காத்துத்து கொண்டிருக்கும் போது, இந்தியன் 1 திரைப்படம் ரீ ரிலீஸ்க்கு வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிகழ்ந்து வரும் திரைப்படங்களின் ரீ ரிலீஸ் போக்கு ரசிகர்களை ஓடிடியை விட்டு வெகுவாக திரையரங்கம் நோக்கி நகரச் செய்துள்ளது.
கடந்த மாதம் விஜய் நடிப்பில் கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதே போல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின் நடிப்பில் வெளியான கஜினி திரைப்படமும் இன்று பல்வேறு இடங்களில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமிதாப், கமல்ஹாசன் பிரபாஸ் நடித்துள்ள 'கல்கி 2898 AD' படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி வெளியீடு!