சென்னை: தனது அசாதாரண நடிப்பு மற்றும் மறக்க முடியாத கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் விருப்பமான நடிகராக இருந்து வந்த ஜோஜு ஜார்ஜ், தற்போது 'பானி' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஜோஜு ஜார்ஜ் இயக்கும் முதல் படம் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
ஜோஜு ஜார்ஜ் எழுத்து மற்றும் இயக்கத்தில் இந்த படம் மாஸ், த்ரில்லர், ஆக்ஷன் வடிவில் தயாராகி வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 100 நாள் பானி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், ஜோஜு ஜார்ஜ் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 'நாடோடிகள்' அபிநயா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். திரைத்துறைக்கு வந்து 28 வருடம் நடிகனாக இருந்த ஜோஜு ஜார்ஜ், தற்போது இயக்குநராகி உள்ளார்.
மேலும், கார்த்திக் சுப்பராஜ், சூர்யா கூட்டணியில் உருவாக உள்ள படத்திலும் ஜோஜு ஜார்ஜ் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை தவிர அனுராக் காஷ்யப்பின் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராகவும் உருவெடுத்துள்ளார். ஜோஜு ஜார்ஜின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அப்பு பாத்து பப்பு புரொடக்ஷன்ஸ், ஏடி ஸ்டுடியோஸ் மற்றும் கோகுலம் மூவீஸ் ஆகியவற்றின் கீழ் எம் ரியாஸ் ஆடம் மற்றும் சிஜோ வட்கான் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
பானி படத்திற்கு விஷ்ணு விஜய் மற்றும் சாம் சிஎஸ் இசையமைக்கின்றனர். இந்த பானி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கிருத்திகா உதயநிதியின் ‘காதலிக்க நேரமில்லை’ படப்பிடிப்பு நிறைவு! - KADHALIKKA NERAMILLAI SHOOTING Wrap