சென்னை: இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரங்களை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கான ஒருவார நிகழ்ச்சி மெட்ராஸ் ஐஐடி வளாகத்தில் நேற்று (மே 20) மாலை துவங்கியது. திரிபுரா ஆளுநர் இந்திர சேனா, இசையமைப்பாளர் இளையராஜா, மெட்ராஸ் ஐஐடி இயக்குநர் காமகோடி ஆகியோர் இந்த விழாவை துவக்கி வைத்தனர்.
மெட்ராஸ் ஐஐடி நிர்வாகமும், இசையமைப்பாளர் இளையராஜாவும் இணைந்து ஐஐடி வளாகத்தில் "மேஸ்ட்ரோ இளையராஜா இசை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பள்ளி மையம்" துவங்கியுள்ளனர். முற்றிலும் மூங்கிலால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு மையம், அடுத்த ஒரு ஆண்டில் முழுமையாக செயல்பாட்டுக்கு வர உள்ளது.
பல்வேறு துறைகள் சார்ந்து ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அளிப்பது போன்ற பணிகளை ஐஐடி செய்து வருகிறது. பல்துறை சார்ந்த சாதனையாளர்களின் பெயரில், அவர்களது நன்கொடை மூலம், பல்வேறு சிறப்பு மையங்கள் மெட்ராஸ் ஐஐடி வளாகத்தில் ஏற்கனவே இயங்கி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது இசையமைப்பாளர் இளையராஜாவும் இணைந்திருக்கிறார்.
ஐஐடி வளாகத்திற்குள், மேஸ்ட்ரோ இளையராஜா இசை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பள்ளி மையம் ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், ஐஐடி வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் நிறைவேறியது. இசையமைப்பாளர் இளையராஜாவும், ஐஐடி இயக்குநர் காமகோடியும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர்.
இளையராஜாவுடன் மெட்ராஸ் ஐஐடி இசை ஆராய்ச்சி: இந்த சிறப்பு மையத்திற்கான கல்வெட்டையும் இளையராஜா திறந்து வைத்தார். இசையில் மிகப்பெரிய ஆராய்ச்சியை இளையராஜாவுடன் இணைந்து மெட்ராஸ் ஐஐடி மேற்கொள்ள இருக்கிறது. மேலும், ஒரு ஆண்டுக்குள் இந்த சிறப்பு மையம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரஉள்ளது.
ரூ.400 உடன் சென்னை பயணம்; இசைக் கற்க வந்து இசை கற்பிக்க உள்ளோம்: விழாவில் ஐஐடி இயக்குநர் காமகோடி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, நூற்றுக்கணக்கான மாணவர்கள் மத்தியில் 'ஜனனி ஜனனி' என்ற பாடலை இளையராஜா பாடினார். இதைத்தொடர்ந்து பேசிய இளையராஜா, "எனது வாழ்வில் இன்று மிகவும் முக்கியமான நாள். இசையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக நானும், எனது தம்பியும் கிராமத்திலிருந்து 400 ரூபாயுடன் சென்னை வந்தோம். இன்று இசையை மற்றவர்களுக்கு கற்பிப்பதற்காக மெட்ராஸ் ஐஐடி வளாகத்தில் சிறப்பு மையம் துவங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இசையில் நான் சாதித்தேனா? - இளையராஜா: மேலும், இசையில் நான் அந்த சாதனை செய்துவிட்டேன், இந்த சாதனை செய்துவிட்டேன் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், நான் இசையில் எந்த சாதனையையும் செய்யவில்லை. கடந்த இருநூறு ஆண்டுகளில் மொசார்ட் போன்ற இசையமைப்பாளர் உலகில் யாரும் இல்லை. எனவே, இசையில் நான் சாதித்து விட்டதாக கூற முடியாது. இளையராஜா போல் பல இளையராஜாக்கள் உருவாக வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: இளையராஜா காப்புரிமை விவகாரம்; பேராசையில் பணம் கேட்பதா? - சீமானின் கருத்து என்ன?