திருச்சி: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் வேணுகோபால், 'ஹிப் ஹாப்' ஆதியை வைத்து இயக்கியுள்ள திரைப்படம், 'பி.டி.சார்'. இதில் கதாநாயகியாகியாக காஷ்மீரா நடித்துள்ளார்.
மேலும் அனிகா சுரேந்திரன், பிரபு, முனிஷ்காந்த், ஆர்.பாண்டியராஜன், இளவரசு, ஆர்.தியாகராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இத்திரைப்படம், நேற்று முன்தினம் (மே 24) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது.
இந்நிலையில், நேற்று திருச்சியில் உள்ள திரையரங்கம் ஒன்றில் ரசிகர்களுடன் 'பி.டி.சார் ' திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்த ஹிப்ஹாப் ஆதி, முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “திருச்சியில் 800 இருக்கைகளுக்கு மேல் கொண்ட இந்த திரையரங்கில் நான் நடித்த திரைப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
மதுரை, தூத்துக்குடி, திருச்சி என அனைத்து இடங்களுக்கும் சென்று ரசிகர்களுடன் இத்திரைப்படத்தை பார்த்து வருகிறோம். நாளை கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் சென்று திரைப்படம் பார்க்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
படம் குறித்து நெகடிவ்வ் கமெண்ட்ஸ் வருவதை பற்றி எனக்கு கவலை இல்லை. அது அவர்களின் கருத்து சுதந்திரம். திரையரங்குகளில் இந்தப் படத்தின் வெற்றியை நீங்களே பார்க்கின்றீர்கள், அப்படி எதுவும் குறை இருந்தால் அதை அடுத்தடுத்த படங்களில் நிவர்த்தி செய்வேன்.
தொடர்ந்து நல்ல படைப்புகளை தருவேன் என்றார். இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என அனைத்து பரிமாணங்களிலும் என்னை பார்க்கலாம். ஒரு கலைஞனாக சமுதாய கருத்துள்ள படைப்புகளை கொடுக்கவே விருப்பப்படுவேன்.
நெல்லை தீபக் ராஜா கொலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இருப்பினும், ஆணவக் கொலைக்கு நான் எதிரானவன். பா.ரஞ்சித் என்ன சொன்னார் என்பதும் எனக்கு தெரியாது. அதனால் அதனைப் பற்றி நான் பேச விரும்பவில்லை என்றார். ஆணவக் கொலைக்கு எதிராக நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே ஹிப் ஹாப் பாடல் எழுதியுள்ளேன்" என அப்பாடலில் சில வரிகளை பாடிக் காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "நான் ஒரு மோட்டிவேஷனல் பேச்சாளர் என்றால் கிடையாது. நான் ஒரு கலைஞனாக, சமுதாயம் சார்ந்து சொல்ல வேண்டிய கருத்துகளை தெரிவிக்கிறோன். அது சிலருக்கு மோட்டிவேஷனாக இருப்பது சந்தோஷம்தான். அடுத்து ஒரு மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் பன்னுகிறேன். அது குறித்த அறிவிப்பை இந்த படம் முடிந்ததும் வெளியிடுகிறோன்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கேன்ஸ் திரைப்பட விழாவில் வரலாறு படைத்த இந்திய நடிகை அனசுயா சென்குப்தா!