சென்னை: ஜி.வி.பிரகாஷ் குமார் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறி தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். நாயகனாக நடித்து வந்தாலும், தங்கலான் உள்ளிட்ட பல முக்கிய படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் ஏப்ரல் 4ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் 'கள்வன்'. ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார், இவானா மற்றும் பாரதிராஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரேவா இந்தப் படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து 'களவாணி பசங்க' என்ற நான்காவது சிங்கிள் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கு ஏகாதேசி பாடல் வரிகள் எழுதியுள்ளார். அந்தோணி தாசன் இந்தப் பாடலைப் பாடியுள்ளார். 'குவாட்டர் தெனம் வாங்கப் போறேன்...' எனத் தொடங்கியுள்ள இந்தப் பாடல் வெளியான உடனேயே பல லட்சம் பார்வைகளைக் கடந்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது.
ஏற்கனவே, இயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ், இவானா இருவரும் இணைந்து பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நக்கலைட்ஸ் டீம் ஜென்சன் திவாகர், பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் நிவேதிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தீனா, ஜி. ஞானசம்பந்தம், வினோத் முன்னா மற்றும் இன்னும் சில நடிகர்கள் நட்சத்திரக் குழுவில் ஒரு பகுதியாக உள்ளனர். யானைகளை பயன்படுத்தி இப்படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இப்படத்தில் இருந்து கருவாச்சி என்ற பாட்டு வெளியாகி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படமும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சித்தார்த் - அதிதி ராவ் ரகசிய திருமணம்? தெலங்கானாவில் வைத்து திருமணம் எனத் தகவல்! - Siddharth Aditi Rao Marriage