சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி அன்று உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தினர். மேலும், இவரை பெருமிதப்படுத்தும் விதமாக மத்திய அரசு கடந்த மே 9 ஆம் தேதி பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைமை கழகம் அறிவிப்பு - 05.07.2024#captainvijyakanth #Premalathavijayakanth #CinemaUpdate #Dmdk pic.twitter.com/oZdqtfYNB9
— Premallatha Vijayakant (@PremallathaDmdk) July 5, 2024
மேலும், தற்போது விஜயகாந்த்தை ஏஐ(AI) தொழில்நுட்பம் மூலம் திரைப்படத்தில் பயன்படுத்தி வருகிறார்கள் என பல செய்திகள் வந்தன. அந்த வகையில், நடிகர் விஜய் நடிக்கும் தி கோட் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்திலும் மறைந்த நடிகர் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.
முன்னதாக, நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு விழாவில், கேப்டன் விஜயகாந்த் இந்த திரைப்படத்தில் இருக்கிறார். அது உருவமாக இருக்கிறாரோ அல்லது எங்களுக்கு நினைவாக இருக்கிறாரோ என்று நான் தற்போது சொல்ல விரும்பவில்லை. ஆனால், இந்த திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் இருக்கிறார் என இயக்குநர் தெரிவித்தார்.
இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், புரட்சிக் கலைஞர் கேப்டனை ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது. எனவே இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது.
எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும். ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கோவை கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் புகார்.. 'டீன்ஸ்' பட ரிலீஸுக்கு பாதிப்பா? - ACTOR PARTHIBAN