சென்னை: லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. கமல்ஹாசன் உடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில், அனிருத் இசையில் தயாராகியுள்ள இப்படம் வருகிற ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்நிலையில், படத்திற்கான ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஷங்கர், கமல்ஹாசன், அனிருத், சித்தார்த் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் ஷங்கர், “என் படங்கள் எல்லாம், இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்பது தான். இந்தியன் 2 அது மாதிரி தான். இப்போதைய காலகட்டத்தில் இந்தியன் தாத்தா வந்தால் எப்படி இருக்குமோ, அது தான் இந்தியன் 2.
இந்தியன் படம் தமிழ்நாட்டில் நடப்பது போன்று உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தியன் 2 தமிழ்நாடு தாண்டி மற்ற மாநிலங்களிலும் கதை விரிகிறது. இந்த படத்தில் 70 நாட்கள் கமல்ஹாசன் மேக்கப் போட்டிருக்கிறார். மேக்கப் போட மூன்று மணிநேரம் ஆகும், சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டு நடித்தார். ஆனாலும், ஷூட்டிங்கிற்கு கமல்ஹாசன் தான் முதலில் வருவார். நான்கு நாட்கள் ரோப்பில் தொங்கிக் கொண்டு நடித்தார்.
கமல்ஹாசன் முதல் நாள் மேக்கப் போட்டு வரும் போது 28 வருடம் கழித்து அதே ஃபீலிங் வந்தது. அவர் உழைப்பு, டெடிக்கேஷன் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். என்ன சேலஞ்ச் கொடுத்தாலும் கமல்ஹாசன் டப் கொடுக்கிறார். அவர் நடிக்கும் போது பிரம்மிப்பாக இருந்தது. அனிருத், நான் என்ன எதிர்பார்த்தேனோ அதை விட சிறப்பாக போட்டுக் கொடுத்திருக்கிறார். 100 சதவீதம் நீங்கள் திருப்தி ஆகும் வரை டியூன் போட்டுக் கொண்டு இருப்பேன் என்று அனிருத் கூறினார்.
படக்குழுவினர் மற்றவருக்கும் நன்றி. விவேக் இந்த படத்தில் ரொம்ப வருஷம் கழிச்சு பார்த்தது எவ்வளவு சந்தோஷமாக இருந்தது. இந்த படத்திற்கு ஆதரவு தந்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்” என்றார். அடுத்து பேசிய நடிகர் சித்தார்த், “21 வருடத்திற்கு முன் இயக்குநர் ஷங்கருடன் இணைய வாய்ப்பு கிடைத்தது. அதற்கு நன்றி. 21 வருடத்திற்கு பிறகு கமல்ஹாசன் சாருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
ஒரு நடிகராக எனக்கு இந்த படத்தில் நீங்கள் கொடுத்த நம்பிக்கை, நிச்சயமாக விடமாட்டேன். கடந்த 20 வருடத்தில் நான் நடித்த பல கதாபாத்திரங்கள் எனக்கு இருந்ததாக பார்க்கிறேன். ரொம்ப என்ஜாய் பண்ணி பண்ணேன். கமல்ஹாசனின் ஸ்டூடன்ட் நான். கமல் இதுவரை என்னோடு நடித்ததில்லை. எட்ட முடியாத உயரத்தில் இருந்து என்னை வழிநடத்தி வந்திருக்கிறார். கமல்ஹாசன் இல்லை என்றால், நடிகனாக நானில்லை. உங்கள் டிரெய்லரை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன்.
அதில் என்னையும் பார்க்க முடிந்தது சந்தோசம். அதற்கு வாய்ப்பு கொடுத்த ஷங்கருக்கு நன்றி. இந்தியன் 2 ரொம்ப முக்கியமான படம். இந்த காலகட்டத்தில் அவர் திரும்ப வந்தால் எப்படி இருக்குமோ, அது தான் இந்தியன் 2. தாத்தா வரப் போறாரு.. கதற விடப் போறாரு. நாங்கள் ரொம்ப காதலித்து நடித்த படம் இது. இந்த படம் வசூல் செய்யும். இந்திய சினிமாவில் இந்தியன் 2 தேவையான படம். இது வரலாற்றுச் சாதனை படைக்கும் படமாக இருக்கும்.
ஷங்கர் மேஜிக்கை திரையில் பார்க்க காத்திருக்கிறோம். ஜூலை 12ஆம் தேதிக்காக காத்திருக்கிறேன். ஒரு படத்தை எடுத்தால் மட்டும் போதாது. அதை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்று கூறினார். நிகழ்ச்சி மேடையில் பேசிய இசையமைப்பாளர் அனிருத், “காலையில் டிரெய்லர் பார்த்ததற்கு நன்றி. ஹார்ட்வொர்க் நெவர் பெயில்ஸ் (Hardwork never fails) என்று சொல்வார்கள். எல்லோரும் இந்தப் படத்துக்கு கடினமாக உழைத்திருக்கிறார்கள். ஜூலை 12 ரொம்ப ஸ்பெஷலாக இருக்கும் என்று நம்புகிறோம்” என்று பேசினார்.
குஜராத் பதிவெண் கொண்ட கார் குறித்து கேள்விக்கு இயக்குநர் ஷங்கர் இந்த கதை எல்லா மாநிலங்களிலும் விரிகிறது என்றார். மேலும், இப்படத்தில் சுகன்யாவின் கதாபாத்திரம் தேவையில்லை என்பதால் அது படத்தில் இடம்பெறவில்லை என்று ஷங்கர் தெரிவித்தார்.