சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகின்றார். அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை அண்மையில் அறிமுகப்படுத்திய விஜய், அடுத்தாக தனது முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடத்த தயாராகி வருகிறார்.
இந்த மாநாடானது அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்ஏ.சந்திரசேகர் சென்னை கோடம்பாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, கலை என்றாலே எனர்ஜியான விஷயம். நடனத்துக்கு பெயர் பெற்ற தில்லானா மோகனாம்பாள், சலங்கை ஒலி போன்ற படங்களை போல் இனி யாரும் எடுக்க முடியாது. இப்போது இதுபோல் எடுக்கத் தொழில்நுட்ப கலைஞர்களும் இல்லை, நடிகர்களும் இல்லை.
இப்போது வரும் படங்கள் வேறுமாதிரி. தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சி அடைந்தாலும் கலை, கலாச்சாரம் மங்கிக்கொண்டே போகிறது. எனது மனைவி 12 வயதில் இருந்து பாட ஆரம்பித்தவர். இப்போது வரையிலும் இசை கற்றுவருகிறார். எனது மனைவி, விஜய் வயிற்றில் கருவாக உருவானது முதல் ஒன்பது மாதங்கள் இளையராஜா கச்சேரியில் பாடிக்கொண்டு இருந்தார்.
இதையும் படிங்க: ஜிஎஸ்டி வரிவிலக்கு கேட்கும் ஹாரிஸ் ஜெயராஜ்; வரி விலக்கு சாத்தியமா?... ஒரு பார்வை
கருவில் உள்ள குழந்தை தினமும் அந்த இசையைக் கேட்டுக்கொண்டே வளர்கிறது. விஜய் இப்போது பாடல் பாடுகிறார் என்றால் யாரிடமும் கற்றுக் கொள்ளவில்லை. கருவிலேயே கற்றுக்கொண்டார் . நடிகர் விஜய்யின் தவெக மாநாட்டுக்கு நீங்கள் எதாவது ஆலோசனை வழங்கினீர்களா என்ற கேள்விக்கு, இது கலை தொடர்பான நிகழ்ச்சி அதுபற்றி மட்டும் கேளுங்கள்.. சமூகம் சார்ந்த கேள்விகளை வெளியில் கேளுங்கள் என்றார்.
மேலும் வேட்டையன் படம் பார்த்தீர்களா என்ற கேள்விக்கு, சிரித்துக் கொண்ட அவர் வேறு கன்டென்ட் எதாவது வேண்டுமா? யாரையாவது நான் திட்டனும். அதனை நீங்கள் போகஸ் செய்து போட வேண்டும். யாரை திட்டனும் சொல்லுங்கள் திட்டுகிறேன் என்று காட்டமாகப் பேசினார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்