சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்கள் சமூக நீதி பேசும் படங்களாக அறியப்படுகிறது. தற்போது வாழை என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்க உள்ளார். இந்தப் படத்தை அப்ளஸ் நிறுவனமும் (APPLAUSE ENTERTAINMENT), நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தில், நடிகர் துருவ் விக்ரம்-க்கு ஜோடியாக பிரேமம், குரூப் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.
இப்படம் பிரபல கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதற்காக, நடிகர் துருவ் விக்ரம் பல மாதங்களாக கபடி விளையாட்டு பயிற்சி மேற்கொண்டார். இப்படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை (மே 6) வெளியாக உள்ளதாக படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், படத்தின் இசையமைப்பாளர் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம், கபடி விளையாட்டு பற்றிய படமாக இருந்தாலும், தனது வழக்கமான பாணியை இதிலும் மாரி செல்வராஜ் பின்பற்றுவார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "முகத்தின் முன் துப்பாக்கியை நீட்டிய ED.. கண் கலங்கினேன்" - இயக்குனர் அமீர் பேச்சு! - Director Ameer