சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர். தற்போது தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் வெற்றி வாகை சூடி வருகிறார்.
ஏற்கனவே சிறந்த நடிகர் என பெயர் பெற்று தேசிய விருதுகளை பெற்றுள்ள தனுஷ், தற்போது இய்க்குநராகவும் கலக்கி வருகிறார். தனுஷ் தனது இயக்கத்தில் முதல்முறையாக இயக்கிய திரைப்படம் பவர் பாண்டி. இந்த படத்தில் தனுஷுடன் ராஜ்கிரண், ரேவதி, மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, தனது 50வது படமாக ராயன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது.
Nilavukku ennadi en mel kobam …. First single in D voice …. Seekiram viduvoma …. #NEEK …
— G.V.Prakash Kumar (@gvprakash) August 1, 2024
மேலும், ஏ.ஆர்.ரகுமான் இசையில் அடங்காத அசுரன், ஓ ராயா ஆகிய பாடல்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 3வது படம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'. இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இளைஞர்களைக் கவர்ந்தது.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் மேத்யூ தாமஸ், அனிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை தனுஷின் ஒண்டர்பார் (Wunderbar films) நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மோஷன் போஸ்டரில் தலைப்பிற்கு கீழ் வழக்கமான காதல் கதை என்ற டேக் லைன் கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளதாகவும், எந்த பாடலை முதலில் ரிலீஸ் செய்வது என்று தெரியவில்லை என்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தில் இருந்து முதல் பாடலை விரைவில் வெளியிட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஜிவி பிரகாஷ் பதிவிட்டுள்ளார். அப்பாடலை தனுஷ் எழுதியுள்ளார். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: வயநாடு நிலச்சரிவு; சூர்யா, ஜோதிகா, கார்த்தி இணைந்து ரூ.50 லட்சம் நிதியுதவி! - Wayanad landslide