சென்னை: இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘டிமாண்டி காலனி 2’ திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 15) வெளியாகிறது. இப்படம் டிமாண்டி காலனி முதல் பாகத்தின் தொடர்ச்சியாகும். இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த கோலிவுட்டை சேர்ந்த நடிகர், நடிகைகள் படம் சிறப்பாக உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 2015ஆம் ஆண்டு டிமாண்டி காலனி முதல் பாகம் வெளியான போது படம் முழுவதும் ரசிகர்களுக்கு முழு திகிலுட்டும் அனுபவத்தை தருவதாக விமர்சனங்கள் வெளியானது.
இந்நிலையில் அதே அனுபவத்தை இரண்டாம் பாகமும் தரும் என ரசிகர்கள் படத்தை காண ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் இயக்குநர் அஜய் ஞானமுத்து தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கோப்ரா படத்திற்கு வெளியான எதிர்மறை விமர்சனம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அஜய் ஞானமுத்து பேசுகையில், "நான் நடிகர் விக்ரம் படத்திற்காக தயாரிப்பாளரிடம் முதலில் ஒரு கதையை கூறினேன். அவர்களுக்கு அந்த கதையில் உடன்பாடு இல்லாததால், ஒரு எழுத்தாளருடன் இணைந்து வேறு ஒரு கதையை உருவாக்கி, அதை தயாரிப்பாளரிடம் கூறினேன். அந்த கதையிலும் அவர்களுக்கு உடன்பாடு இல்லை.
பின்னர் தயாரிப்பாளர் ஒரு கதையின் சுருக்கத்தை என்னிடம் கூறி அதனை உருவாக்க சொன்னார். ஆனால் அக்கதையில் எனக்கு விருப்பமில்லை. ஆனால் எனது உதவி இயக்குநர்களுக்கு பிடித்திருந்தது. பிறகு வேறு வழியில்லாமல் அக்கதையை விரிவாக்கம் செய்தேன். ஆனால் எனக்கு முழு மனது இல்லை. அது கோப்ரா திரைப்படமாக உருவானது. இது போன்ற ஒரு சில காரணங்களால் கோப்ரா திரைப்படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் வெளியானது” என்றார்.
மேலும், அஜய் ஞானமுத்து டிமாண்டி காலனி கதையை வைத்து 4 பாகங்கள் வரை உருவாக்கலாம் என கூறியுள்ளார். இந்நிலையில் நாளை ‘டிமாண்டி காலனி 2’ படத்துடன் விகரம் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "போர் செல்லும் வீரன்" - சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்' பட ஸ்பெஷல் வீடியோ வெளியீடு! - sivakarthikeyan amaran making video