சென்னை: சமீப காலமாக தமிழ் திரையுலகில் சில நல்ல கதைக்களம் அமைந்த திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகாததால், பழைய திரைப்படங்களை ரீ ரிலீஸ் செய்யும் கலாச்சாரம் வெகுவாகப் பரவி வருகிறது. அந்த வகையில், நடிகர் விஜயின் கில்லி திரைப்படம் கடந்த வாரம் ரீ ரிலீஸ் ஆகி, முதல் நாளிலே 4 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.
இந்நிலையில், நடிகர் அஜித்தின் பிறந்தநாளான மே மாதம் 1ஆம் தேதி அன்று, மங்காத்தா திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகும் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்த நிலையில், சம்பந்தப்பட்டவர்களிடம் வெளியீட்டு குறித்தான பேச்சுவார்த்தை கூட நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தன்று நடிகர் அஜித்தின் பில்லா திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை திரையரங்கில் பார்க்கத் தவறிய ரசிகர்கள் கொண்டாடும் விதமாகவும், தற்போது ட்ரென்டாகி வரும் ரீ ரிலீஸ் கலாச்சாரத்திற்காகவும் படக்குழு தற்போது இந்தத் திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளது.
இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், நடிகர்கள் அஜித்குமார், பிரபு, சந்தானம், நடிகைகள் நயன்தாரா, நமீதா ஆகியோர் நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளிவந்த பில்லா திரைப்படம், வரும் மே 1ஆம் தேதி அன்று திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படுவதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய காலக்கட்டத்தில் 15 கோடி ரூபாய்க்கு தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம், 175 நாட்கள் திரையில் ஓடி ஒரு புதிய மைல் கல்லை எட்டியது. அதேபோன்று, நடிகர் ரஜினிகாந்த்தின் சிவாஜி திரைப்படம் வெளியாவதற்கு முன்பு வரை, கேரளாவில் அதிக வசூலைப் பெற்ற திரைப்படம் என்ற பெருமையை அஜித்தின் பில்லா திரைப்படமே பெற்றிருந்தது.
இதுமட்டுமல்லாது, பில்லா திரைப்படம் அஜித்தின் திரை வாழ்வில் மிக முக்கியமான படமாகும். ஸ்டைலான அஜித் மற்றும் யுவனின் பின்னணி இசை, பாடல்கள் இப்படத்தை வேறு தளத்திற்குக் கொண்டு சென்றது என்றால் அது மிகையாகாது. தமிழ்நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் மீண்டும் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஸ்ரீமுஷ்ணம் விவகாரம்; மோதலில் பெண் உயிரிழந்தது தொடர்பாக மேலும் மூவர் கைது!