வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் இருந்து அதிபர் ஜோ பைடன் விலகியதையடுத்து அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரிஸ், ஆளும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதே போல் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் பிரச்சாரம் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் உலக நாடுகள் அணைத்தும் இதன் முடிவுகளை உற்று நோக்கி வருகின்றனர்.
இதற்கிடையே உலகளவில் பிரபலங்களாக உள்ள பல்வேறு நபர்கள் கமலா ஹாரிஸ் மற்றும் டோனால்ட் டிரம்ப் ஆகியோரில் ஒருவருக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் ஆஸ்கார் விருது வென்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கமலா ஹாரிஸிற்கு ஆதரவாக 30 நிமிடங்கள் அடங்கிய பதிவுசெய்யப்பட்ட இசை நிகழ்ச்சி ஒன்றை தயாரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிபர் ஆன உடன் இந்தியா விதிக்கும் கட்டணத்துக்கு நிவாரணம்: டொனால்ட் டிரம்ப் உறுதி
ஏஏபிஐ: இது கமலா ஹாரிஸின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக ஏஏபிஐ (AAPI Victory Fund) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பானது பிரச்சாரத்தில் நிதி திரட்டுவது, வாக்காளர்களை ஈர்க்க நிகழ்ச்சிகளை நடத்துவது போன்ற பணிகளை செய்து வருகிறது.
அந்த வகையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசைக் கச்சேரி நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது. இது குறித்து ஏஏபிஐ தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, "ஏ.ஆர். ரஹ்மான் விர்ச்சுவல் கான்செர்ட் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது" என அறிவித்துள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்