சென்னை: நடிகர் அப்புக்குட்டி தனது பிறந்தநாளை, சென்னை கோடம்பாக்கம் 'அன்னை உள்ளம்' ஆதரவற்ற பெண்கள் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர், அவர் முதியோர்களுக்கு உணவு பரிமாறினார். அவர்களின் மருத்துவச் செலவிற்கு உதவித் தொகை வழங்கி, அவர்களிடம் ஆசீர்வாதமும் பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எனக்கு அம்மா இல்லை, இவர்கள் எல்லாம் என்னை பிள்ளையா பாக்குறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. எப்போதும் எனது பிறந்தநாளை படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடுவேன். இந்த ஆண்டு அன்னை உள்ளம் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடியது மகிழ்ச்சியாக உள்ளது.
இங்கு உள்ளவர்கள் என்னை அவர்களது பிள்ளை போல பார்க்கிறார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எனது பிறந்தநாளை ஒட்டி, நான் நடித்த பிறந்தநாள் வாழ்த்துகள் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி இதனை வெளியிட்டார். ஒரு மனிதன் இருக்கும் போது எப்படி வாழ வேண்டும் என்பதே இப்படத்தின் கதை.
இந்த நேரத்தில் எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. கில்லி படம் நான் வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் கிடைத்த வாய்ப்பு. ஒரு காட்சி நடித்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது. விஜய் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சி. அவருக்கு என்ன தெரியும் என்பதை நிச்சயம் காண்பிப்பார். மக்களுக்கு கண்டிப்பாக உதவி செய்வார், நல்லது செய்வார் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
இதையும் படிங்க: மேற்கு வங்க ஆசிரியர்கள் நியமன ஊழல் விவகாரம்: கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை - உச்ச நீதிமன்றம்! - West Bengal Teacher Job Scam