சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதையடுத்து, தற்போது ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் அஜித்குமார் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கப் போகிறாரா என்ற கேள்வியும் இந்த ஃபர்ஸ்ட் லுக்கின் மூலம் எழுந்துள்ளது. ஏனென்றால், மூன்று கதாபாத்திரங்களில் அஜித் நடிப்பது போன்ற ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2006ஆம் ஆண்டு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த வரலாறு திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர், தற்போது இப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பும் தொடங்கி நடைபெற்று வருகிறது. குட் பேட் அக்லி படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியிடப்படும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "குட் பேட் அக்லி படத்திற்காக நான் ஒரே நேரத்தில் பல நட்சத்திர நடிகர்களுடன் பணியாற்றி வருகிறேன். வாழ்க்கையின் மேஜிக் என்னவென்றால், எனது நட்சத்திரத்தின் போஸ்டரை எனது அலமாரியில் ஒட்டுவதும், திரையரங்குகளில் பேனர்களாக வைப்பதும் தான். இந்த ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகனாக மட்டுமின்றி fan boy director -ஆக வழங்குகிறேன்" என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
அஜித் தற்போது இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகர் விஷால் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிங்க: "சாவித்திரி முதல் வீரப்பன் வரை".. தமிழில் எடுக்கப்பட்ட பயோபிக் படங்கள்.. சிறப்பு பார்வை! - Tamil Biopic Movies List