சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய்சேதுபதி. இவர் தற்போது குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் இயக்கத்தில், மகாராஜா என்ற படத்தில் நடித்துள்ளார். இது விஜய் சேதுபதியின் 50வது படமாகும். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
முன்னதாக, இயக்குநர் ஆறுமுககுமார் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' என்ற படத்தில் நடித்துள்ளார். அதன்பின் தற்போது விஜய்சேதுபதி - ஆறுமுககுமார் காம்போ மீண்டும் இணைந்துள்ளது. இந்த படம் விஜய்சேதுபதிக்கு 51வது படமாகும். இப்படத்தில் நடிகர் யோகி பாபு, ருக்மணி வசந்த், பிரித்விராஜ் பி.எஸ்.அவினாஸ், திவ்யா பிள்ளை உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு இன்று (மே 17) வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ’ஏஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை 7 சிஎஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கலர்ஃபுல்லான டைட்டில் டீசர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்தின் கலை இயக்கத்தை கையாளுபவராக ஏ.கே.முத்து, எடிட்டராக ஆர்.கோவிந்தராஜ், ஒளிப்பதிவாளராக கரன் பி ராவத் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றுகின்றனர்.
முன்னதாக, நடிகை கத்ரீனா கைஃப் உடன் விஜய்சேதுபதி நடித்து சமீபத்தில் வெளியான மெரி கிறிஸ்துமஸ் படம் பரவலான வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: "4 வருசமா பட வாய்ப்பு இல்ல" - ஹிப் ஹாப் தமிழா வருத்தம்! - PT Sir Movie