சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிவா இயக்கத்தில் 'கங்குவா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். யோகி பாபு, திஷா பதானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வரும் அக்டோபர் 10-ஆம் தேதி பத்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.
இப்படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44-ஆவது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும், ஜெயராம், கருணாகரன், மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இப்படத்தில் சூர்யாவின் விண்டேஜ் லுக் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நீலகிரியில் நடைபெற்று வந்தது. ஜூலை 26ல் தொடங்கிய படப்பிடிப்பு ஆகஸ்ட் 15வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் நடந்த சண்டைக்காட்சி படப்பிடிப்பில் சூர்யாவின் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் தற்போது சூர்யா ஓய்வில் உள்ளார்.
Dear #AnbaanaFans, It was a minor injury. Pls don’t worry, Suriya Anna is perfectly fine with all your love and prayers. 🙏🏼
— Rajsekar Pandian (@rajsekarpandian) August 9, 2024
இதனையடுத்து சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து 2டி நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர், "சூர்யாவுக்கு லேசான காயம் தான். ரசிகர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். உங்களுடைய அன்பால் அவர் நன்றாக இருப்பார்" என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இயக்குநர் சிவா பிறந்தநாளன்று வெளியாகும் ’கங்குவா’ டிரெய்லர்?