சென்னை: இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, சசிக்குமார் ஆகியோர் நடித்து கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான படம் கருடன். இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்தது. படத்திற்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் சூரி, சசிக்குமார், சமுத்திரக்கனி, இயக்குநர்கள் வெற்றிமாறன், ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் சூரி, "இந்த மேடைக்கு வருவது ஒரு கடினமான விஷயம். ஒரு கதையின் நாயகனாக இரண்டு படமும் நடிச்சு, இந்த மேடைக்கு வந்துள்ளேன். கருடன் செய்தியாளர் சந்திப்புக்கு வந்தபோது ரொம்ப பதட்டமாக இருந்தது.
செய்தியாளர்கள் சந்திப்பின் இடைவேளையில் படம் நன்றாக இருப்பதாகச் சொல்ல, அப்போது தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. பயத்தோடு வந்தேன். பயில்வான் ரங்கநாதன் நின்றார். வந்து சூப்பர் என்று சொல்லி விட்டார். எல்லோரும் கொண்டாடிவிட்டார்கள். ஓப்பனிங் ஷோ நன்றாக இருந்தது என்றார்.
மேலும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படம் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார். இயக்குநர் வெற்றிமாறன் கிட்ட ஒருத்தன் எடிட்டரா வேலை பார்த்துட்டா உலகத்தில் எங்கே வேண்டுமானாலும் வேலை செய்யலாம். அண்ணே மறக்கமாட்டேன். விடுதலைக்கு முன்.. விடுதலைக்குப் பின்.. என்று மாறிவிட்டது என வெற்றிமாறனை சுட்டிக்காட்டினார். சசிக்குமாருடன் ஆரம்பத்தில் இருந்து இருக்கிறேன். அவர் ஒருபோதும் என்னை விட்டுக் கொடுத்ததில்லை. எனக்கு எப்போதும் நீங்க தான் ஹீரோ" என்று சூரி நெகிழ்ச்சியுடன் பேசினார்.
இனி அவர் பரோட்டா சூரி கிடையாது: நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் சசிக்குமார், "ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. நல்ல வேளை சக்சஸ் மீட் என்று போடாமல் தேங்க்ஸ் மீட் என்று போட்டீர்கள். சக்சஸ் மீட் என்றால் ஒரு படம் சரியா ஓடாதுன்னு ஒரு விஷயம் போய்ட்டு இருக்கிறது. ஓடாத படத்துக்கு தான் சக்ஸஸ் மீட் வைப்போம் என்று சொல்கிறார்கள். படம் ஓடவில்லை என்கிறார்கள். அதற்கு காரணம் தோல்வி பயம். தோல்வியை ஒப்புக்கொண்டால் தான் ஜெயிக்க முடியும்.
ஒரு தோல்விக்கு ஒரு காரணம் தான் சொல்வோம். ஆனால் வெற்றிக்கு பல காரணங்களைச் சொல்லுவோம். இந்த கருடன் வெற்றிக்குப் பல காரணம் சொல்கிறார்கள். சூரிக்காக இந்த படத்தை பண்ணேன். நான் ஒரு நல்லது நினைத்தால் எனக்கு ஒரு நல்லது நடந்துருக்கு. இனிமேல் யாரும் பரோட்டா சூரின்னு சொல்லாமல் ஹீரோ சூரின்னு சொல்லுவார்கள்.
ஒவ்வொரு தியேட்டருக்கு போகும்போது ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். அந்த பயம் தான் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும். சூரி ஜெயித்ததை நாங்கள் சந்தோசமாகக் கொண்டாடுகிறோம். இனி தமிழ் சினிமாவில் வரும் ஒவ்வொரு படமும் தியேட்டரில் வரும்; வெற்றி பெறும் என்று நம்பிக்கை இருக்கிறது" என்று சசிக்குமார் பேசினார்.
இதையும் படிங்க: மஞ்சும்மல் பாய்ஸ் வைப்.. குணா ரீ-ரிலீஸ் - எப்போது தெரியுமா? - Guna Movie Rerelease