கோயம்புத்தூர்: இயக்குநர் துரை செந்தில் இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கருடன் திரைப்படம் மே 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், நடிகர் சூரி கோவையில் உள்ள தனியார் மாலில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "காமெடியனாக பார்க்கப்பட்ட சூரி விடுதலை திரைப்படத்திற்குப் பிறகு வேறு மாதிரியான ஒரு ஜானரில் இருந்திருப்பேன். அதேபோல், கருடன் படத்தில் வேறு ஒரு பரிணாமத்தில் இருந்திருப்பேன் என நம்புகிறேன். கதாநாயகனாகவே தற்பொழுது தனக்கு வாய்ப்புகள் வந்துள்ளது, காமெடியனாக வாய்ப்புகள் தற்போது வரவில்லை.
மேலும், இந்த படத்தில் நடிகர் சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விடுதலை படத்திலிருந்தது போலவே, இந்த படத்திலும் சிறிது கஷ்டங்களை அனுபவித்தேன். அதற்கான பலன் நிச்சயமாகக் கிடைக்கும் என நம்புகிறேன்.
காமெடி கதாபாத்திரங்களில் நடிக்கும் பொழுது அதற்கான காட்சிகளை மட்டும் நடித்துவிட்டுச் சென்று விடுவோம். தற்பொழுது கதாநாயகனாக நடிக்கின்ற போது மிகப்பெரிய பொறுப்புணர்ச்சி இருப்பதாக உணர்கிறேன். கதாநாயகனாக வெற்றிமாறன் அளித்த இடத்தை தக்க வைத்துக்கொள்வதற்கு மெனக்கெட வேண்டி உள்ளது.
நான் கடந்து வந்த பாதையை நினைத்து பெருமை கொள்கிறேன். மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றிமாறன் இந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு மிகவும் நன்றாக இருக்கிறது. எனக்கு இன்னொரு விடுதலை படமாக இது அமையக்கூடும் என்று கூறினார்.
துரை செந்தில் உடன் படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டேன். விடுதலை திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தின் கதாநாயகனாக இருந்த நிலையில், அதிலிருந்து வெளியில் வரும் பொழுது தனக்கு ஒரு மாஸ் எண்ட்ரி வைத்து விட்டால், நான் ஊர் பக்கம் தான் எனது வண்டியை விட வேண்டும்.
சினிமாவில் எப்பொழுதும் காலி (empty) என்பதே இருக்காது. தொடர்ந்து அந்தந்த இடத்திற்கு ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள். மேலும், சினிமா அந்த இடத்திற்கு ஒரு ஆளைத் தேர்வு செய்து விடும். நான் கதாநாயகனாக நடிக்கும் பொழுது, யார் காமெடியன் கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார்களோ அவர்களை கட்டாயமாகத் தேர்வு செய்வேன்.
காமெடி நடிகர்கள் சிலர் வறுமைக்கோட்டில் இருப்பது குறித்தும், சிலர் உயிரிழந்தது குறித்தும் கேள்வி எழுப்பியதற்கு, அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு செய்து வருகிறார்கள். சில நேரங்களில் இயற்கை காரணங்களினால் மரணிப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும், நான் எந்த இயக்குநர் அழைத்தாலும், நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன். புதிய இயக்குநர்கள் கூட உலக அளவில் திரும்பிப் பார்க்கின்ற அளவிற்கு படங்களை எடுக்கின்றனர். சிறிய இயக்குநர் தான் என்னை உலக அளவில் கொண்டு சென்றனர்.
தல - தளபதி, கவின் - மணிகண்டன் என்று எதிர் எதிர் நாயகர்கள் இருப்பதைப் போல் சூரி - சந்தானம் என்று எடுத்துக் கொள்ளலாமா என்று கேள்வி எழுப்பியதற்கு, உங்களுடைய பார்வையில் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். சூரிக்கு சூரி தான்" என்றார்.
இதையும் படிங்க: உத்தமவில்லன் விவகாரம்; "கமலை வெச்சு செய்வது சங்கடமாக இருக்கிறது" - தயாரிப்பாளர் தேனப்பன் வருத்தம்! - Kamal Vs Thirrupathi Brothers