நெய்வேலி: நடிகை திரிஷா குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ வெளியிட்ட அவதூறு கருத்துக்கு நடிகர் மன்சூர் அலிகான் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து மன்சூர் அலிகான் வெளியிட்டு உள்ள ஆடியோ பதிவில், அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ வெளியிட்ட கருத்து அருவருக்கத்தக்க வகையில் உள்ளதாகவும், சினிமா துறையில் உள்ள சக நடிகை பற்றி ஒருவர் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் சுயலாபத்திற்காக இந்த கருத்தை வெளியிட்ட அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.
கவுரமாக நடத்தப்படும் நடிகைகள் குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி வெளியிட்ட பேச்சுகள் மிகவும் ஆபத்தானவை, அருவருக்கத்தக்கவை என்றும் சமுதாயத்தை பாதிக்கக் கூடிய வகையில் அவரது கருத்துகள் உள்ளதால் உரியவர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மன்சூர் அலிகான் அந்த ஆடியோ பதிவில் தெரிவித்து உள்ளார்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் வெளியிட்ட அவதூறு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதேபோல், நடிகை திரிஷா குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி வெளியிட்ட கருத்துக்கு பல்வேறு திரைத் துறையினரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநரும் நடிகருமான சேரன், தனது எக்ஸ் பக்கத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகியின் சர்ச்சை கருத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கோரிக்கை விடுத்து உள்ளார். அதேபோல், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
பஞ்சாயத்து தலைவரில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் முதல் நாட்டின் குடியரசின் தலைவர் வரை ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற, இந்த நாட்டில் பெண்கள் மீதும் அவர்களின் பெண்மை மீதும் நடத்தப்படுகின்ற இம்மாதிரியான அவதூறு தாக்குதலை இரும்பு கரம் கொண்டு மத்திய மாநில அரசு களைய வேண்டும் என்று அந்த அமைப்பு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சட்ட நடவடிக்கை பாயும்! - அதிமுக பிரமுகரின் அவதூறுக்கு த்ரிஷா காட்டமான பதிலடி