சென்னை: இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான படம் 'இந்தியன்'. கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். லஞ்சத்திற்கு எதிராக போராடும் ஒரு முதியவரின் கதையாக இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. 28 வருடங்களுக்கு பிறகு தற்போது 'இந்தியன் 2' என்ற பெயரில் அப்படத்தின் 2-ம் பாகம் தயாராகியுள்ளது.
இப்படத்தில் கமலுடன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் ஜூலை மாதம் வெளியாக உள்ள நிலையில், ஏற்கனவே படத்தில் இருந்து பாரா என்ற ஒரு பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில், நேற்று 'இந்தியன் 2' படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், இயக்குனர், லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பேசிய உலகநாயகன் கமல்ஹாசன், "இந்தியன் ஒரு பெரிய கதை, இந்தப் படத்தில் மொத்தம் மூன்று பாகங்கள். இதே மாதிரியான ஒரு படத்தை நான் சிவாஜியை வைத்து இயக்க நினைத்திருந்தேன். அவர்தான் என்னை இந்தியன் படத்தில் அப்பா - மகன் என இரு வேடத்திலும் நடிக்கச் சொன்னார். இந்த இசைவெளியீட்டிற்கு ஆன செலவு நான் நடித்த பல படங்களின் பட்ஜெட்டைக் காட்டிலும் அதிகம்.
எங்களுக்கு உறுதுணையாக இருந்த உதயநிதிக்கு மக்கள் வேறு பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பொறுப்பில் அவர் வெற்றி பெற வேண்டும். எங்களுக்கு அவர் உறுதுணையாக இருந்தது போல், அவரோடு நாங்களும் உறுதுணையாக நிற்க வேண்டி சூழல் வரும். மனோபாலா, விவேக் இல்லை என்பது நமக்கு தான். ஆனால், படத்தில் அவ்வாறு தெரியாது.
பொதுவாக எனக்கு இரண்டாம் பாகம் என்றால் ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால், என்ன எதிர்பார்த்து வரவேண்டும் என்று மக்களுக்கு தெரியும். இந்தியன் 2 - இந்த படத்தின் நடுவே வராத சோதனைகள் இல்லை. கரோனா, விபத்து, அரசியல் சோதனைகள் என பல சோதனைகள் ஏற்பட்டது. அரசியல் இல்லாமல் இருக்க முடியாது. இந்தியனே அதான் பேசுகிறது.
நான் தமிழன். நான் இந்தியன் என்பதே எனது அடையாளம். இங்க பிரிச்சு விளையாடலாம்னு, யாராவது நினைச்சா.. அது இந்தியாவில் நடக்காது. யாதும் ஊரே யாவரும் கேளிர். நாம் எப்போதும் வந்தாரை வாழ வைப்போம். தமிழனுக்கு எப்போது அமைதிகாக்க வேண்டும் என்று தெரியும், எங்கே இருக்க வேண்டும் என்று தெரியும்.
ஸ்ருதி மனது வைத்திருந்தால் நான் இப்போவே தாத்தாதான். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீ செய்யும் எதையும் வெளியில் சொல்லிக்கொள்ள வெட்கப்பட்டால், அதை செய்யாதே. அதுதான் தனிமனித ஒழுக்கம். என்னைப் பொறுத்தவரை அன்புதான் உச்சகட்டம். என்னைப் போன்ற பகுத்தறிவாளிகள் கடவுள் இல்லாமல் இருந்திடலாம். ஆனால், மனிதர்கள் இல்லாமல் இருக்க முடியாது. அன்பே சிவமில் அன்பு தான் முதன்மை எனக் கூறியுள்ளார்.
எனக்காக கண்கலங்கும் பழக்கம் சிம்புவுக்கும், அவருடைய அப்பாவிற்கும் இருந்து வந்தது. நான் ஒருமுறை நடிக்க மாட்டேன் என்று சொன்னபோது டி.ஆர். ராஜேந்திரர் என்னிடம் வந்து “இனிமேல் நடிக்க மாட்டேன் என்று சொல்லக்கூடாது” என்று அழுது என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு போனார்”.
இதையும் படிங்க: கமல்ஹாசனிடம் திட்டு வாங்கிய நெல்சன், லோகேஷ்.. இந்தியன் 2 விழாவில் சுவாரஸ்ய பகிர்வு! - Indian 2 Audio Launch