சென்னை: நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'ராயன்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது தனுஷ் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் தனுஷ் படங்களுக்கு கட்டுப்பாடு விதித்தது. அதில், இனி தனுஷை வைத்து படம் தயாரிக்க நினைக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருந்தது. தனுஷ் நிறைய தயாரிப்பாளரிடம் முன்பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு படம் பண்ணுவதில்லை என்று கூறப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்திற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பிலும் மாறி மாறி அறிக்கைகள் வெளியிடப்பட்டன. பின்னர் சமீபத்தில் நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் நாசர், தனுஷ் விவகாரத்தில் சுமூக முடிவு எட்டப்படும் என்றார். மேலும் இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்றார்.
இதையும் படிங்க: அஜித்குமாரின் புதிய போர்ஷ் கார்; ஷாலினி இன்ஸ்டா பதிவு... இந்த கார இவரும் வெச்சிருக்கார்?
இந்த நிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் தனக்கு உறுதுணையாக இருந்த நடிகர் சங்கத்திற்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தயாரிப்பாளர்கள் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் எழுப்பிய புகார்களை தீர்க்க உதவிய தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த பிரச்சனைகளை தீர்ப்பது எங்களுக்கு உதவியது மட்டுமல்லாமல் தொழில்துறைக்கு ஓர் நேர்மையான முன்னுதாரணமாக அமைந்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடயே பேச்சுவார்த்தையை நடத்தி தனுஷ் விவகாரத்தை சுமூகமாகியது. அதன் அடிப்படையில் தயாரிப்பாளர்கள் தேனாண்டாள் முரளி மற்றும் 5 ஸ்டார் கதிரேசன் ஆகியோருடான பிரச்சனை முடிவுக்கு வந்தது.
அதன் அடிப்படையில் கடந்த ஒன்பதாம் தேதி நடிகர் தனுஷ் மீண்டும் இயக்கி நடிக்கும் புதிய படத்திற்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது.