சென்னை: இந்தியாவில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்று மாணவர்கள் கல்லூரிகளில் சேர்க்கப்படுகின்றன. ஆனால், இந்த ஆண்டு நீட் தேர்வில் ஏற்பட்ட முறைக்கேடு காரணமாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளினால், மருத்துவப் படிப்பு கலந்தாய்வு தூங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வை மற்றொரு முறை நடத்தி கலந்தாய்வு நடத்த
உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால் தற்போது தேசிய மருத்துவ ஆணையம் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய அரசின் மருத்துவ கல்வி நிலையங்களில், மாநில அரசின் மருத்துவக்கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான 15 சதவீதம் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
4 கட்டங்களாக நடைபெறும் கலந்தாய்வு:
- ஆன்லைன் வழியில் நடைபெறும் கலந்தாய்விற்கான முதல் சுற்றில் ஆகஸ்ட் 14 முதல் 21 வரை மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும்.
- ஆகஸ்ட் 16 முதல் 20ஆம் தேதி வரை மாணவர்கள் தங்கள் விரும்பும் கல்லூரியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- 20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் உத்தேச மாணவர் சேர்க்கை ஆணை வழங்கப்படும்.
- ஆகஸ்ட் 23ஆம் தேதி மாணவருக்கு ஒதுக்கப்பட்ட இடம் குறித்த அறிவிப்பு வெளியாகும்.
- ஆகஸ்ட் 24 முதல் 29ஆம் தேதி வரை மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர வேண்டும்.
இந்த ஆண்டுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான மருத்துவ கலந்தாய்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு கலந்தாய்வு வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் தொடங்க வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்