சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. இதன்படி, இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளத்தின் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டின்பிஎஸ்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், "துணை வணிகவரி அலுவலர், உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்பதிவாளர், சிறப்பு உதவியாளர், உதவி பிரிவு அலுவலர், வனவர், கூட்டுறவுத்துறை முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், கைத்தறி துறை ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட 2,327 காலி பணியிடங்களுக்கான குரூப் 2, 2A பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்ட போட்டித்தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 20ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
The Memorandum of Admission (Hall Ticket) for the candidates admitted for recruitment to the posts included in Combined Civil Services Examination-II (Group II and IIA Services) (OBJECTIVE TYPE) (Notification No: 08/2024 dated 20.06.2024) for which the Common Preliminary… pic.twitter.com/1KyR2VAZ7p
— TNPSC (@TNPSC_Office) September 4, 2024
தேர்வர்கள் கடைசி நேரத்தில் அதிகளவில் விண்ணப்பம் செய்ததால் ஏற்பட்ட சர்வர் பிரச்னையால், ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக ஒருநாள் அவகாசம் வழங்கப்பட்டு ஜூலை 20ம் தேதியுடன் விண்ணப்ப பதிவு நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஹால் டிக்கெட்: குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வுகள் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளன. அதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் செய்யும் தளத்தின் மூலமாக மட்டுமே தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து ஹால் டிக்கெட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாட்டு (ம) விதிமுறைகள்:
- குருப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு காலையில் நடைபெறுகிறது. தேர்வு மையங்களுக்குக் காலை 8.30 மணிக்குள் வர வேண்டும். காலை 9 மணி வரையில் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கும்.
- அனைத்து தேர்வர்களும் சரியான நேரத்திற்கு முன்பே தேர்வுக்கூடத்திற்குள் இருக்க வேண்டும். சலுகை நேரத்திற்குப் பிறகு எந்த ஒரு தேர்வரும் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார். தேர்வு நேரம் முடியும் வரை தேர்வர் யாரும் தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.
- தேர்வர்கள், தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டுடன் (Hall Ticket) தேர்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும். தவறினால் தேர்வர், தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்.
- தேர்வர் தங்களுடைய ஆதார் அட்டை, கடவுச்சீட்டு (PASSPORT), ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை (PANCARD), வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல் கொண்டு வர வேண்டும்.
- தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் தேர்வரின் புகைப்படம் அச்சிடப்படவில்லை அல்லது தெளிவாக இல்லை அல்லது தேர்வரின் தோற்றத்துடன் பொருந்தவில்லை என்றால். தேர்வர் தன்னுடைய கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம் ஒன்றினை ஒரு வெள்ளைக் காகிதத்தில் ஒட்டி அதில் தனது பெயர், முகவரி, பதிவு எண்ணைக் குறிப்பிட்டு முறையாகக் கையொப்பமிட்டு, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின் ஒளிநகல் மற்றும் ஆதார் அட்டை, கடவுச்சீட்டு (Passport), ஓட்டுநர் உரிமம், நிரந்தரக்கணக்கு அட்டை (PAN CARD) வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் ஒளிநகலை இணைத்து அதனை தலைமைக் கண்காணிப்பாளரிடம் சரிபார்க்கப்பட்டு மேலொப்பமிடும் பொருட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
- தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் தேர்வர் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதில், ஏதேனும் முரண்பாடு இருத்தால் உடனடியாக தேர்வாணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்.
- தேர்வர்கள் கருமைநிற மை கொண்ட பந்து முனைப் பேனாவை (Black ink Ball Pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும். மின்னணு சாதனங்களான செல்போன் (Mobile Phone) மற்றும் புத்தகங்கள் குறிப்பேடுகள் கைப்பைகள், மற்ற அனுமதிக்கப்படாத பொருட்கள் போன்றவற்றுடன் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு வர வேண்டாம் என்று தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளில் ஏதேனும் ஒன்றினை மீறினால் அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். அவரது விடைத்தாள் செல்லாததாக்கப்படும் அல்லது தேர்வாணையத்தால் விதிக்கப்படும் வேறு ஏதேனும் அபராதத்திற்கும் நேரிடும். எனவே தேர்வாணையத்தினால் வெளியிடப்பட்ட இத்தேர்வு தொடர்பான அறிவிப்பு தேர்வர்களுக்கான அறிவுரைகள் மற்றும் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு OMR விடைத்தாள் மற்றும் வினாத்தொகுப்பு ஆகியவற்றில் அறிவுரைகளைப் படித்து தேர்வினை கவனமுடன் எழுதிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குரூப் 2 தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் என்ன நடவடிக்கை? தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!