புவனகிரி: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தெலங்கானா மாநிலம் புவனகிரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சி பல்வேறு பொய்களை கூறி மக்களவை தேர்தலில் போட்டியடுவதாகவும், பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவார் என்று கூறி வருவதாகவும் தெரிவித்தார்.
மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று அமித் ஷா கூறினார். காங்கிரஸ் கட்சி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா தற்போதைய மக்களவை தேர்தல் ஒரு குடும்பத்தின் வளர்ச்சியா அல்லது நாட்டின் வளர்ச்சியா என்பதற்கு இடையிலான போர் போன்றது என்றும் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்த நாட்டை வழிநடத்தி வரும் பிரதமர் மோடி இடஒதுக்கீடுக்கு ரத்து செய்ய எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுத்ததில்லை என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள், ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீட்டை காங்கிரஸ் கட்சி பறித்துக் கொண்டு இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதாக அமித் ஷா கூறினார்.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தெலங்கானா மாநிலம் பாஜகவுக்கு 4 இடங்களை வழங்கியது, இந்த முறை 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று கூறினார். மேலும் தெலுங்கானாவில் பாஜக பெறும் இரட்டை இலக்க வெற்றி பிரதமர் மோடியை 400 இடங்களைக் தாண்ட உதவும் என்றார்.
இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடுகளை ரத்து செய்து, எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று அமித் ஷா தெரிவித்தார். நரேந்திர மோடிக்கும், ராகுல் காந்திக்கும் இடையே இந்த முறை பொதுத் தேர்தல் நடைபெறுவதாகவும் ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் இடையேயான போர் இந்த தேர்தல் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். 17 மக்களவை தொகுதிகளை கொண்ட தெலங்கானா மாநிலத்தில் வரும் மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.