ஹைதராபாத்: இந்திய அரசியலில் ஒரு மாபெரும் தலைவராக விளங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான சீதாராம் யெச்சூரி, நெஞ்சக நோய்த் தொற்று பாதிப்பால் அவதிபட்டு வந்தநிலையில், கடந்த மாதம் 19-ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவர் நடத்திய நீண்டகால அரசியல் பயணம் இந்திய அரசியல் வரலாற்றின் முக்கிய அத்தியாயமாக உள்ளது. இடதுசாரி இயக்கத்தில், குறிப்பாக பணி மற்றும் உழைப்பாளர்களின் உரிமைக்காக அவர் ஆற்றிய சேவை, நாட்டு மக்களின் மனதில் நீண்டகாலமாக நிலைத்து இருக்கும். அவர் பகுத்தறிவும், தூய்மையான அரசியல் கொள்கைகளும், நாடு முழுவதும் இடதுசாரி கொள்கைகளை பரப்பிய அவரது ஆற்றலும் அசாத்தியமானவை என பலரும் அவரை பாராட்டியது உண்டு.
இளமைப் பருவம், கல்வி: சென்னையில் உள்ள ஒரு கல்வியறிவு பெற்ற தெலுங்கு குடும்பத்தில் சீதாராம் யெச்சூரி ஆகஸ்ட் 12, 1952-ஆம் ஆண்டு பிறந்தார். தொடர்ந்து தனது கல்வியை ஹைதராபாத்தில் தொடங்கி, பின்னர் டெல்லியில் உள்ள ஸ்டீஃபன்ஸ் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். இதற்குப் பிறகு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) முதுகலைப் படிப்பைத் தொடர்ந்தார்.
அங்கு தான் அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியது. அங்கு அவருக்கு கிடைத்த மாணவர் தலைவர் பொறுப்பினால், பொதுவாழ்வில் தன்னை பெரிதும் ஈடுபடுத்தத் தொடங்கினார். பல மாணவர் போராட்டங்களில் ஈடுபட்டு, இடதுசாரி கொள்கைகளின் முதன்மையான போதகராக மாறினார் யெச்சூரி.
இதையும் படிங்க: "முதுகு வலியால் துடித்த யெச்சூரி" நினைவுகளை அசைபோட்ட சு.வெங்கடேசன்
அரசியல் வாழ்க்கையின் தொடக்கம்: இதனையடுத்து 1975-ஆம் ஆண்டில் தன்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் (CPI(M)) இணைத்துக் கொண்டார். இதே சமயத்தில், இந்திரா காந்தி ஆட்சியில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட அவசரநிலைக்கு எதிராகக் குரல் கொடுத்தார். இந்த அரசியல் போராட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டபோதும், அவர் கையாண்ட சமரசமற்ற நெருக்கடியின் வெளிப்பாடுகள், அவருக்கு இந்திய அரசியலில் ஒரு திடமான நிலையை உருவாக்கின. தொடர்ந்து 1985-இல் கட்சியின் தேசிய நிர்வாகக் குழுவில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இவர் 2005 முதல் 2017 வரை மேற்கு வங்கத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
தலைமைப் பொறுப்பை ஏற்ற யெச்சூரி: 2015ஆம் ஆண்டு சிதாராம் யெச்சூரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது பொறுப்புக் காலத்தில் கட்சியின் கொள்கைகளைக் காக்கும் திறமையுள்ள தலைவராக இருந்தார்.
யெச்சூரி தனது தலைமையின் கீழ், இந்திய அரசியலில் வளர்ந்து வரும் வலதுசாரி கொள்கைகளுக்கு எதிரான பல்வேறு கூட்டணிகளை உருவாக்க முயன்றார். குறிப்பாக, பாஜக போன்ற அரசியல் குரல்களை எதிர்க்கும் சீரிய செயல்பாடுகளில் அவர் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமத்துவ கொள்கைகளின் முன்னோடி: அரசியல் வாழ்க்கையின் முழுவதும் யெச்சூரி சமூக நீதி, சமத்துவம் மற்றும் பாரபட்சமற்ற அரசியல் கொள்கைகளை வலியுறுத்தினார். விவசாயிகள், உழைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் விரும்பும் ஒற்றுமையை உருவாக்கும் கொள்கைகளை பரப்புவதில் அவர் ஆற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார்.
மாநிலங்களவையில், அவர் ஆற்றிய உரைகள், எழுப்பிய கேள்விகள் ஒவ்வொன்றும் தெளிவானவை, ஆழமானவை, மற்றும் நாட்டின் எதிர்காலத்தின் மீது கேள்விகளை எழுப்பும் வகையில் இருந்ததாக சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வரும் அரசியல் தலைவர்கள் அவருக்கு புகழாராம் சூட்டி வருகின்றனர்.