மும்பை: அண்மையில் மும்பையில் கொல்லப்பட்ட பாபா சித்திக் என்ற பிரபல அரசியல்வாதி மகனின் புகைப்படம் கொலை குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் மொபைலில் இருந்தது தெரியவந்துள்ளது.
மாகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும்,தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவருமான பாபா சித்திக் அரவது மகன் ஜீஷான் சித்திக் அலுவலகத்துக்கு வெளியே கடந்த 12ஆம் தேதி மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாபா சித்திக் கொலை வழக்கில் தொடர்புடைய கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஒருவரின் மொபைல் போனில் பாபா சித்திக்கின் மகன் ஜீஷான் சித்திக்கின் புகைப்படம் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த புகைப்படத்தை ஸ்னாப்சாட் வழியே பகிர்ந்து கொண்டதாக கைது செய்யப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். பாபா சித்திக்கின் கொலை திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இது போன்ற பல்வேறு வகைகளில் அவர்கள் தகவல்களை பரிமாறிக் கொண்டது தெரியவந்திருக்கிறது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான கனோஜியா என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஷுபம் லோங்கர் என்பவர்தான் பாபா சித்திக் கொலைக்கு கூலிப்படை ஆட்களை திரட்டியதாக தெரியவந்துள்ளது. தம்மை ஷுபம் லோங்கர், தொடர்பு கொண்டபோது ஒரு கோடி ரூபாய் பணம் தரும்படி கேட்டதாக கனோஜியா தெரிவித்துள்ளார். எனினும் பிரபல அரசியல் நபரை கொல்வது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் கனோஜியா தயங்கியதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் நிதின் சாப்ரே என்பவரையும் ஷுபம் லோங்கர் அணுகியதாக தெரிகிறது. ஆனால் திடீரென இருவரையும் தவிர்த்து உத்தரபிரதேசத்தை சேர்ந்த சில நபர்களை ஷுபம் லோங்கர் தேர்வு செய்ததாக போலீசார் கூறுகின்றனர். எனினும், உபி நபர்கள் மிக குறைவான தொகையை கேட்டதால்,அவர்கள் பாபா சித்திக்கின் முக்கியத்துவம் தெரியாமல் தப்ப விட்டு விடுவார்கள் என்று ஷுபம் லோங்கர் கருதியதாகவும் போலீசார் குறிப்பிட்டனர். எனவே தர்மராஜ் காஸ்யாப், குர்னைல் சிங், மற்றும் ஷிவ்குமார் கவுதம் ஆகியோரை பாபா சித்திக்கை கொல்ல ஷுபம் லோங்கர் நியமித்ததாகவும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
இப்போது தலைமறைவாக உள்ள ஷுபம் லோங்கரை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதே போல ஷிவ் குமார் கவுதம் மற்றும் ஜீஷன் அக்தர் ஆகியோர் நேபாள நாட்டுக்கு தப்ப முயற்சிக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்