வயநாடு: கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 29) நள்ளிரவு ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை 386ஆக உயர்ந்துள்ளது. தற்போது 7-வது நாளாக தேசிய பேரிடர் மீட்புப்படையினர் முழு வீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தும் 200க்கும் மேற்பட்ட நபர்கள் காணவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, கடந்த சில நாட்களாக கேரளாவில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக ஜூலை 29ஆம் தேதி கேரளாவில் பல பகுதிகளில் நிலச்சரிவு, காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக முண்டக்கை, சூரல் மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஒட்டுமொத்த கிராமமுமே மண்ணுக்குள் புதைந்தது, பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதில், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பலரது உடல்களும், உடல் பாகங்களும் சிதைந்து அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டோரின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அடையாளம் தெரியாத நபர்களின் உடல்கள் பொது தகன மேடையில் தகனம் செய்யப்பட்டு வருகிறது. இறந்தவர்களின் உடல் உறுப்புகளை அடையாளம் கான, டிஎன்ஏ சோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, காணாமல் போனவர்களின் உறவினர்களிடமும் டிஎன்ஏ சேகரிப்பு துவங்கியுள்ளது. தற்போது நிலச்சரிவால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள சூரல் மலை, முண்டக்கை உள்ளிட்ட மூன்று கிராமங்களில் தொடர்ந்து 7வது நாளாக இன்று மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முன்னதாக ரேடார் சிக்னல் மூலம் யாரேனும் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் உயிருடன் உள்ளார்களா எனத் தேடி வந்தனர்.
இதுதொடர்பாக, IBOD சிக்னல் மூலம் இறந்த மனித சடங்கள் உள்ளதா என தேடும் சோதனை நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி, மோப்பநாய் கண்டறியும் பகுதிகள் மற்றும் துர்நாற்றம் வரும் பகுதிகளில் IBOD ஆய்வுக்குழு சோதனை செய்து தேடி வருகிறது எனவும், மேலும் இந்த சிக்னல் மூலம் 3 மீட்டர் ஆழம் வரை மட்டுமே கண்டறிய முடியும் எனவும் IBOD ஆய்வுக்குழு தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மகளின் ஒரு கைக்கு இறுதிசங்கு செய்த தந்தை: வயநாடு பேரிடரில் சிக்கி மாயமானவர்களில் ஒருவர் ராமசாமியின் மகள் ஜிசா. பல கட்டத் தேடுதல் பணிக்குப் பிறகு நேற்று ஜிசாவின் ஒரு கை மட்டும் கிடைத்துள்ளது. அந்த கையில் இருந்த திருமண மோதிரத்தில், ஜிசாவின் கணவர் பெயர் பொறிக்கப்பட்டிருந்ததை அடையாளமாகக் கொண்டு, இது தனது மகளின் கைதான் என ராமசாமி உறுதி செய்துள்ளார். தற்போது, தனது மகளின் ஒரு கைக்கு மட்டும் தந்தை ராமசாமி இறுதிச்சடங்கு செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நிலச்சரிவு என முதலில் தகவல் கொடுத்த பெண் உயிரிழப்பு: சூரல் மலை கிராமத்தில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் வீட்டுக்குள் வெள்ளம் புகுந்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக, அதே பகுதியைச் சேர்ந்த நீது ஜோஜோ என்ற பெண் தான் பணிபுரியும் வயநாடு மருத்துவ அறிவியல் நிறுவனத்துக்கு தகவல் கொடுத்துள்ளார் எனக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தான் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.
நீதுவின் குடும்பத்தினர் மலை மேல் ஏறிச் சென்றுள்ளனர். ஆனால், சரியான நேரத்துக்கு மீட்புக் குழுவினரால் செல்ல முடியாததால், நிலச்சரிவு ஏற்பட்டதில் சிக்கி நீது ஜோஜோ மட்டும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது உடல் கடந்து 2 நாட்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒரே குடும்பத்தில் 16 பேரை இழந்து தவிக்கும் பெண்: கேரளாவில் உள்ள மேப்பாடி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், கலதிங்கல் நவ்ஷூபா என்ற 40 வயது முஸ்லீம் பெண் தாய், தந்தை, அண்ணன் உள்ளிட்ட அவரது குடும்பத்தில் 11 பேரையும், அதேபோல தனது கணவர் குடும்பத்தில் மாமியார் உள்ளிட்ட 5 பேரையும் என மொத்தம் 16 பேரை இழந்து தவிக்கும் சோகம் அரங்கேறியுள்ளது.
இந்த துயர சம்பவத்திற்கு நடுவே, வெள்ளார்மலை கிராமத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சேதமடைந்துள்ள வீடுகளில் அடையாளம் தெரியாத சிலர் புகுந்து ஆவணங்கள், பணம் உள்ளிட்டவற்றை திருடி வருவதாக அதிர்ச்சி தகவல் பரவியது. அதனால், அனுமதியின்றி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சூரல் மலை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்