வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினர் அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவு தருவார்கள் என்பதில் இருவேறு நிலைப்பாடுகள் தென்படுவதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. குடியரசு கட்சி வேட்பளாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் களத்தில் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரீஸ் போட்டியிடுகிறார். அமெரிக்காவில் மட்டும் தோராயமாக 52 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இதில் 23 லட்சம் இந்தியர்கள் வாக்களித்த தகுதி பெற்றவர்களாவர். இந்திய வம்சாவளியினர் கணிசமான வாக்குவங்கியைக் கொண்டிருப்பதால் அதிபர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
எனவே, இந்திய வம்சாவளியினர் வாக்குகளைப் பெறுவதில் அதிபர் வேட்பாளர்களான டொனால்டு டிரம்ப், கமலா ஹாரீஸ் இருவருமே போட்டுக்கொண்டு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு கட்டமாக இந்த ஆண்டு தீபாவளி வாழ்த்து சொன்ன முன்னாள் அதிபர் டிரம்ப் இந்துக்களுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருந்தார்.
இது குறித்து வாஷிங்டன்னில் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய இந்திய அமெரிக்கரான ஜேபி சிங்,"இந்திய வம்சாவளியினருக்குள் யாரை ஆதரிப்பது என்பதில் இரண்டுவிதமான நிலைப்பாடு உள்ளது. சிலர் குடியரசு கட்சி வேட்பாளரை ஆதரிக்கின்றனர். சிலர் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை ஆதரிக்கின்றனர். இருதரப்பையும் ஆதரிப்பதற்கு இந்திய வம்சாவளியினரிடம் தனிப்பட்ட காரணங்கள் உள்ளன.
இதையும் படிங்க: பல்வேறு முதன்முறை அம்சங்களால் கவனம் பெறும் அமெரிக்க அதிபர் தேர்தல்
ஜனநாயக கட்சியோடு ஒப்பிடும்போது மத சுந்திர விவகாரத்தில் குடியரசு கட்சியினர் ஆதரவு தெரிவிப்பதில்லை. குறிப்பிட்ட அளவு இந்திய வம்சாவளியினர் குடியரசுக் கட்சியினர் மீது அரசியல் ரீதியான ஆதரவு நிலைப்பாடு கொண்டுள்ளனர்.இந்திய தொழிற்துறை சமூகத்தினருக்கு சாதகமான கொள்கைகளை குடியரசு கட்சி கொண்டிருக்கிறது என்று அவர்கள் கருதுகின்றனர்," என்றார்.
அமெரிக்க தேர்தல் குறித்து கருத்துத் தெரிவித்த இந்திய அமெரிக்கர்களில் ஒருவரான சுக்சந்த் சிங்,"பெரும்பாலான இந்திய தொழிலதிபர்கள் டிரம்ப்புக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் டிரம்ப்பின் குடியேற்ற கொள்கைகளையும் அவர்கள் ஆதரிக்கின்றனர். இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபரானால் பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என்று இந்திய வம்சாவளியினர் விரும்புகின்றனர். மேலும் டிரம்ப் அடிப்படையில் ஒரு தொழிலதிபர். ஆனால் கமலா ஹாரீஸ் எந்தொரு வணிக பின்னணியும் கொண்டவர் அல்ல. இந்த விஷயத்தில் டிரம்ப்புக்கு இந்திய வம்சாவளியினர் ஆதரவு தெரிவிக்கின்றனர். அவர் மீது கண்மூடித்தனமாக நம்பிக்கை வைத்திருக்கின்றனர்,"என்றார்.
தேர்தல் குறித்து பேசிய இந்திய அமெரிக்கர்களில் ஒருவரான முகுந்த் ஆகாஷே," நான் 35 ஆண்டுகளாக இங்கு வசிக்கின்றேன். இந்திய வாக்காளர்கள் ஜனநாயக கட்சி ஆதரவில் இருந்து குடியரசு கட்சிக்கு ஆதரவாக மாறி வருகின்றனர். குடியரசு கட்சியினர் எப்போதுமே தொழில் வணிகத்துக்கு ஆதரவு தெரிவிப்பதுதான் அதற்கு காரணமாகும். குடியரசு கட்சி ஆட்சியில் வரி விதிப்பும் குறைவாக இருக்கும் என்பதும் இந்திய அமெரிக்க தொழிலதிபர்களின் ஆதரவுக்கு காரணமாகும்,"என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்