டெல்லி: மக்களவை மழைக்கால கூட்டத் தொடர் நேற்று (ஜூலை.22) தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை.23) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். 18வது மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது.
இரண்டாவது முறையாக மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றுக் கொண்டார். மக்களவை தேர்தலுக்கு முன்னதாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய பின் முழு பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
அதேநேரம் தொடர்ந்து 7வது முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இதன் மூலம் சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்யும் முதல் நிதி அமைச்சர் என்கிற சிறப்பை நிர்மலா சீதாராமன் பெற உள்ளார். இதற்கு முன் மொராஜி தேசாய் தொடர்ந்து 6 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார்.
பட்ஜெட்டில் வரிச் சலுகை அல்லது உச்சவரம்பு உயர்த்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இருக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்திற்கு என்னென்ன அறிவிப்புகள் இருக்கும் என முழுமையான விவரம் தெரியவராத நிலையில், சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கான நிதி, மதுரை, திருச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு இருக்குமா என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்பாக செய்தியாளர்களிடையே பேசிய பிரதமர் மோடி, அமிர்த காலத்தை நோக்கிய முதல் பட்ஜெட் என்பதால் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்று தெரிவித்திருந்தார். மேலும் அடுத்த நான்கரை ஆண்டுகளின் முன்மாதிரியாக தற்போதைய பட்ஜெட் அறிவிப்புகள் இருக்கும் என்றும் பிரதமர் மோடி கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நேற்று (ஜூலை.22) நடைபெற்ற முதல் நாள் கூட்டத் தொடரில் 2023 -24 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2024 ஆண்டில் இந்தியாவின் நிகர் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவிகிதமாக வளர்ச்சியடைந்ததாகவும் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 7 சதவிகிதத்திற்கும் மேலாக வளர்ச்சியை பதிவு செய்து வருவதாகவும் நிர்மலா சிதாராமன் கூறினார்.
இதையும் படிங்க: பணிவீக்கத்திற்கு மத்தியிலும் பொருளாதார வளர்ச்சி.. பொருளாதார ஆய்வறிக்கை கூறுவது என்ன? - Economic Survey 2023 2024