அலிகர்க்: மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் அலிகர்கில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது மக்களின் சொத்துகளை கணக்கெடுத்து மீண்டும் பங்கீடு செய்யும் அதில் பெண்களின் மாங்கல்யத்தின் மீது கூட அவர்களுக்கு (காங்கிரஸ் கட்சிக்கு) ஒரு கண் உண்டு என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பொது மக்களின் சொத்துக்கள் மற்றும் செல்வங்களை கணக்கீடு செய்து அதை மறுபங்கீடு செய்ய காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு உள்ளதாகவும், ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகிய இரண்டு இளவரசர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட வாரிசு அரசியல், ஊழல் உள்ளிட்ட கொடுஞ் செயல்களுக்கு அலிகர்க் மக்கள் அஞ்சமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் யாரார் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் எவ்வளவு சொத்து மதிப்பு கொண்டு இருக்கிறார்கள் என கணக்கிடுவோம் என்று தெரிவித்து உள்ளதாக கூறினார். மேலும், நம்ம தாய் மற்றும் சகோதரிகளின் தங்கத்தை கூட அவர்கள் கணக்கிடுவார்கள் என்றும் பெண்களின் மாங்கல்யத்தை கூட அவர்கள் விட்டு வைக்க மாட்டார்கள் பிரதமர் மோடி தெரிவித்தார்.
கிராமமோ, நகரமோ உங்களது உழைப்பில் வாங்கிய வீடுகளில் ஒன்றை காங்கிரஸ் எடுத்துக் கொள்ளும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். மேலும், இது கம்யூனிஸ்ட் சித்தாந்தம் என்றும் இந்த கொள்கைகள் மூலம் அவர்கள் ஏற்கனவே பல நாடுகளை நாசமாக்கியுள்ளதாகவும் கூறினார். இப்போது இதே கொள்கையை காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியும் கையில் எடுத்து நாடு முழுவதும் அமல்படுத்த திட்டமிட்டு உள்ளதாக கூறினார்.
நாட்டில் இஸ்லாமியர்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றங்களுக்காக காங்கிரஸ் கட்சி ஒன்றும் செய்யவில்லை என்றும் இஸ்லாமிய பெண்களின் உரிமைகளை மீட்க தனது அரசு முத்தலாக்கிற்கு எதிரான சட்டம் இயற்றியது, இந்தியர்கள் அதிகளவில் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் வகையில் ஒதுக்கீட்டை அதிகரித்தது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டதாக பிரதமர் மோடி கூறினார்.
முன்னதாக, ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நாட்டின் வளங்கள் மற்றும் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கே அதிக முன்னுரிமை இருப்பதாக தெரிவித்ததாக பிரதமர் மோடி கூறினார். மேலும், அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்கள், நாட்டில் ஊடுருவியவர்களுக்கு நாட்டின் வளம் மற்றும் செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கீட்டு கொடுத்ததாகவும் கூறினார்.
நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஊடுருவல்காரர்களுக்கு கொடுக்க வேண்டுமா? இதற்கு நீங்கள் சம்மதிக்கிறீர்களா? என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமர் மோடியின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது. இதனிடையே, பிரதமர் மோடியின் பிரசார வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து உள்ள தமிழக அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், "இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்" என்று பதிவிட்டு உள்ளார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் இந்த பதிவு குறித்து இந்திய தேர்தல் ஆணையம் எந்த கருத்தும் வெளியிடவில்லை.
இதையும் படிங்க : 1951 தேர்தலில் 35 பேர் போட்டியின்றி தேர்வு! வரலாறு கண்ட அன்னபோஸ்ட் வெற்றிகள்! யார் அதிகம் பாஜகவா? காங்கிரசா? - Lok Sabha Election 2024