புதுடெல்லி: இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் இளநிலை நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துள்ள உச்ச நீதிமன்றம். அவ்வாறு ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்வது நியாயமாக இருக்காது எனவும் தமது தீர்ப்பில் கூறியுள்ளது.
நாடு முழுவதும் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்துவிட்டு, மீண்டும் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால், அது கடுமையான தொடர் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
நீட் தேர்வில் திட்டமிட்ட முறைகேடு நடைபெற்றிருப்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை இல்லை என்று தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ள நீதிபதிகள், அதேசமயம் வினாத்தாள் கசிவு மூலம் பாட்னா மற்றும் ஹசாரிபாக்கில் தேர்வு நடத்தப்பட்ட மையங்களில் தேர்வெழுதி மாணவர்களில் 155 பேர் பயனடைந்துள்ளனர் என்பதும் அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளில் தெரிய வருகிறது என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியிருந்தனர்.
கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் இளநிலை நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததாகவும், இத்தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் புகார் எழுப்பிய பல்வேறு போட்டியாளர்கள், இத்தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த தேசிய தேர்வு முகமைக்கு (NTA) உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.