டெல்லி: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், கடந்த மே 4ஆம் தேதி கோவை போலீசாரால் தேனியில் வைத்து கைது செய்யப்பட்டார். பெண் காவலர்கள் மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் குறித்து அவதூறாகப் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதவிர, காரில் கஞ்சா வைத்திருந்ததாக தேனி போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர்.
அது மட்டுமல்லாமல், மே 12 அன்று, அப்போதைய சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்ம் பேரில் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இவர் மீது சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவில் மட்டும் ஏழு வழக்குகள் உள்ளன. அவற்றில் 3 வழக்குகள் மீது விசாரணை நடத்தப்படுகிறது. இரண்டு வழக்குகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதனிடையே, சவுக்கு சங்கரின் தாயார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு எதிராகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள ஆட்கொண்டர்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கவும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று நீதிபதிகள் சுதான்சு துலியா மற்றும் அஷானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சவுக்கு சங்கருக்கு இந்த வழக்கில் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தனர். அதேநேரம், வேறு வழக்குகளில் மனுதாரர் சிறையில் இருந்தால், அதனை இந்த உத்தரவு பாதிக்காது எனவும் நீதிபதி அமர்வு தெளிவுபடுத்தியது. முன்னதாக, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, சவுக்கு சங்கர் ஏன் கைது செய்யப்பட்டார் என விளக்கி அதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தனர்.
அப்போது, “இது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையா? இது சாதாரணமான சிவில் வழக்கு அல்ல. ஒரு தடுக்க வேண்டிய விஷயம்” என நதிபதி அமர்வு தெரிவித்தது. இதனையடுத்து, சவுக்கு சங்கரின் தாயார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தவே, “குற்ற வழக்குகளில் வெளியில் வந்துவிடுவார் என்பதற்காகவே சவுக்கு சங்கர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்” என வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "தமிழகம் போலீஸ் மாநிலமாக மாறி வருகிறது" - பெலிக்ஸ் ஜெரால்டின் வழக்கறிஞர் ஆவேசம்!