டெல்லி: 18வது மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் ஆகிய மாநில சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆந்திர பிரதேசம், ஒடிசா சட்டப் பேரவை தேர்தல்களில் பதிவாக நேற்று (ஜூன்.4) ஒரே கட்டமாக எண்ணப்பட்டன.
ஆந்திர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. ஜூன் 9ஆம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்கிறார்.
ஆந்திராவில் பதவியேற்பு விழாவுக்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக இன்று (ஜூன்.5) டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு கலந்து கொள்கிறார். டெல்லி செல்லும் முன் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளோம், மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன், தெலுங்கு தேசத்திற்கு கிடைத்த வெற்றி மக்களுக்கு கிடைத்த வெற்றி. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் 5 ஆண்டு கால ஆட்சியில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.
ஜெகன் மோகன் ஆட்சியில் மிக மோசமாக துன்புறுத்தப்பட்டேன், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆந்திராவில் அரசு நிர்வாகம் சரியாக இயங்கவில்லை. கடந்த 5 ஆண்டு கால ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் மாநிலம் வளர்ச்சியில் 30 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி. தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளேன், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளேன். தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் குட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறேன்.
மாநிலத்தின் நலன் மற்றும் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திர தேர்தலில் 55 புள்ளி 38 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் அதில் தெலுங்கு தேசம் கட்சி 45 சதவீதமும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 39 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் பலர் தூக்கம் இல்லா இரவுகளளை கழித்தனர். பலர் துன்புறுத்தப்பட்டதனர்" என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யான் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கலந்து கொள்ள டெல்லி விரைந்தார். பவன் கல்யானின் ஜனசேன கட்சி ஆந்திர பிரதேசம் சட்டப் பேரவை தேர்தலில் 21 இடங்களையும், மக்களவை தேர்தலில் இரண்டு இடங்களையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆட்சி அமைப்பது யார்? பாஜக, இந்தியா கூட்டணி தீவிர ஆலோசனை! - Lok Sabha Election Result 2024