நாராயண்பூர்/தாண்டேவாடா: சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மத் வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் இன்று நடத்திய என்கவுன்ட்டரில் இதுவரை 28 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரின் நாராயண்பூர் மற்றும் தாண்டேவாடா உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் அபுஜ்மத் வனப்பகுதி அமைந்துள்ளது. நக்சல்கள் என்கவுன்ட்டர் தொடர்பாக தாண்டேவாடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுரவ் ராய் கூறுகையில், "இன்று மதியம் ஒரு மணியளவில் என்கவுன்ட்டர் தாக்குதல் தொடங்கியது. இதில் நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் இருந்து ஏகே-47, எஸ்எல்ஆர் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.
இதையும் படிங்க: சனாதன விவகாரம்; ஆந்திர துணை முதல்வர் மீது மதுரை காவல் ஆணையரிடம் புகார்!
என்கவுன்ட்டர் தொடர்பாக போலீஸ் தரப்பில் மேலும் கூறுகையில், "வழக்கமான தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது, வனப்பகுதிக்குள் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. வனப்பகுதிக்குள் படையினர் முன்னேறியதும் நக்சலைட்டுகள் சுடத் தொடங்கினர்.
இதையடுத்து நக்சலைட்டுகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. நாராயண்பூர் மற்றும் தண்டேவாடா காவல்துறையின் கூட்டுப் படை, என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் நிலைகொண்டது. அப்போது இரு தரப்பிலும் துப்பாக்கிச்சூடு நடந்தது. தேடுதல் நடவடிக்கை முடிந்த பிறகு, என்கவுன்ட்டர் குறித்த முழுமையான தகவல்கள் வெளியிடப்படும்." என்றனர்.
காவல் துறை, பாதுகாப்புப் படையினரின் பதிலடியில் 28 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தகவலை, பஸ்தர் ஐஜி- பி.சுந்தர்ராஜும் உறுதி செய்துள்ளார். பஸ்தர் மண்டலத்தில் உள்ள 7 மாவட்டங்களில் இந்த ஆண்டு நடந்த என்கவுன்ட்டர்களில் இதுவரை 160-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளனர்.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/04-10-2024/22607693_whatsup.jpg)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்