நாராயன்பூர்: சத்தீஸ்கரின் நாராயண்பூர் - காங்கர் மாவட்ட எல்லைகளுக்கு நடுவே அமைந்துள்ள அபுஜ்மத் வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து அபுஜ்மத் வனத்தில் உள்ள டெக்மேட்டா, காக்கூர் பகுதிகளில் இன்று (ஏப்.30) காலை 6 மணி அளவில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதில் நக்சலைட்டுகளுக்கு எதிராக சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதிரடி படையினரின் என்கவுன்டரில் இரண்டு பெண்கள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்க்கப்பட்டு உள்ளது.
கொல்லப்பட்டவர்களின் உடல்களை கைப்பற்றி தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாராயண்பூர் மாவட்ட ஐஜி தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கொல்லப்பட்டவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், சம்பவ இடத்தில் இருந்து ஏகே 47 துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார்.
நாராயண்பூர் மற்றும் காங்கர் உட்பட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் நிலையில் அதை கட்டுக்குள் கொண்டு வர சிறப்பு அதிரடிப் படை அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு அதிரடிப் படையினர் மேற்கொண்ட என்கவுன்டர்களில் இந்த ஆண்டு இதுவரை 88 நக்சலைட்டுகள் சத்தீஸ்கரில் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் கடந்த 15 நாட்களில் சத்தீஸ்கரில் நடந்த இரண்டாவது பெரிய நல்சலைட் என்கவுன்டர் இது என்பது குறிப்பிடத்தகக்து. முன்னதாக முதல் கட்ட மக்களவை தேர்தலுக்கு முன்பாக சத்தீஸ் பஸ்டர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நக்சல் தலைவர் உள்பட 18 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கொலம்பிய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 9 வீரர்கள் பலி! - Colombia Army Helicopter Crash