டெல்லி: அதானி குழுமம் முறைகேட்டிற்குப் பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான SEBI-யின் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவருக்கு பங்குகள் இருந்ததாக ஹிண்டன்பெர்க் நிறுவனம் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டு உள்ளது. முறைகேட்டில் உடந்தை என்பதாலேயே அதானி குழுமம் மீது செபி தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பரபரப்பு புகார் வைக்கப்பட்டுள்ளது.
செபியின் தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் அதானி நிறுவனத்திற்கு சொந்தமான வெளிநாட்டு பங்குகளில் பணம் முதலீடு செய்துள்ளதாகவும் அதனால் தான் அதானி மீது அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளது. செபி அதானி மீது நடவடிக்கை எடுக்காமல் போனதற்கு செபியின் தலைவர் மாதபி பூரி புச் அதானிக்கு சொந்தமான வெளிநாட்டு பங்குகளில் பணம் முதலீடு செய்ததே காரணம் என ஹிண்டன்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செபி தலைவரும் அவரது கணவர் தவால் புச்சும், வினோத் அதானி பயன்படுத்திய பெர்முடா மற்றும் மொரீஷியஸ் நாட்டு பங்குச்சந்தை பங்குகளில் முதலீடு செய்துள்ளளதாகவும், அதானியின் பங்குகளில் இவர்கள் அதிக அளவில் முதலீடுகளை செய்து இருப்பது தெரியவந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மதாபி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் முதலில் சிங்கப்பூரில் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் தேதி ஐபிஇ பிளஸ் ஃபண்ட் 1 இல் தங்கள் கணக்கை தொடங்கியதாகவும் மதாபு புச் மற்றும் அவரது கணவரின் நிகர சொத்து மதிப்பு 10 மில்லியன் அமெரிக்க டாலர் வரை இருக்கலாம் என்றும் ஹிண்டன்பெர்க் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஹிண்டன்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2017ஆம் ஆண்டு செபியின் முழுநேர உறுப்பினராக மாதவி பொறுப்பேற்ற நிலையில், 2018 பிப்ரவரி 26ஆம் தேதி வெளியான ஒரு கடிதத்தில், அவர்கள் பங்கின் மதிப்பு 8.72 லட்சம் அமெரிக்க டாலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி தங்களின் பங்குகளை விற்பனை செய்யும்படி நிறுவனத்துக்கு தவால் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள தவால் புச், தங்கள் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டை மறுக்கிறோம், எந்த உண்மையும் இல்லை. எங்களின் நிதி சார்ந்த விஷயங்கள் வெளிப்படைத்தன்மையுடனே உள்ளது. இதுகுறித்து முழு விளக்கத்தை அளிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அதானி குழும முறைகேடு புகார் தொடர்பாக நேரில் ஆஜராகி ஹிண்டன்பர்க் நிறுவனம் விளக்கம் அளிக்க கோரி செபி சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில், செபி தலைவரின் அதானி பங்குகள் குறித்து ஹிண்டன்பர்க் புதிய கட்டுரையை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்தாண்டு ஹிண்டன்பெர்க்கின் அறிக்கையை தொடர்ந்து, அதானி நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்த நிலையில், திங்கள்கிழமை பங்குச் சந்தை தொடங்கியவுடன் மீண்டும் அதானி குழுமத்தின் பங்குகள் சரிவை காணும் என்று முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்திய ராணுவம் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு! 2 வீரர் வீரமரணம்! தொடரும் சோதனை! - Jammu Kashmir Encounter