டெல்லி : உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து தேர்தல் பத்திரங்கள் குறித்த தரவுகளை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா. எஸ்பிஐ வங்கி வழங்கிய தேர்தல் பத்திர தரவுகளை மார்ச் 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.
தேர்தல் பத்திரங்கள் குறித்த தரவுகளை வெளியிடக் கோரிய உத்தரவில் ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் கோரிய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் இன்று (மார்ச்.12) மாலைக்குள் தரவுகளை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது.
அதேநேரம், எஸ்பிஐ வங்கி தரும் தரவுகளை தொகுத்து இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை எஸ்பிஐ வங்கி வழங்கி உள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு திட்டம் தொடங்கியதில் இருந்து ஏறத்தாழ 30 முறை 16 ஆயிரத்து 518 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை எஸ்பிஐ வங்கி வெளியிட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக கட்சிகளுக்கு வழங்கும் தேர்தல் பத்திர முறையை கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி ரத்து செய்த உச்ச நீதிமன்றம் இதுவரை கட்சிகள் பெற்ற தொகை உள்ளிட்ட தகவல்களை மார்ச் 6ஆம் தேதிக்குள் எஸ்பிஐ வங்கி வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும், ஸ்டேட் பேங் ஆப் இந்தியா வெளியிடும் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது வலைதளத்தில் வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட மார்ச் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என எஸ்பிஐ வங்கி உச்ச நீதிமன்றத்தில் கோரியது.
இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர் கவாய், ஜே.பி பர்திவாலா, மற்றும் மனோஜ் மிஸ்ரா அகிய 5 பேர் கொண்ட அமர்வு இன்று (மார்ச்.12) வங்கி வேலை நேரத்திற்குள் தகவல்களை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது.
இதையும் படிங்க : இந்திய குடியுரிமை பெற தேவையான ஆவணங்கள் என்ன? விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது?