லிஜயவாடா: ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரும், ஊடக வித்தகருமான மறைந்த ராமோஜி ராவுக்கு ஆந்திர மாநில அரசின் சார்பில் இன்று நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விஜயவாடாவில் உள்ள அனுமோலு கார்டன்சில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மூத்த பத்திரிகையாளர் என்.ராம், திரையுலக நட்சத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ராமோஜி ராவின் மகனும், ஈநாடு ஊடக நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான செருகுரி கிரண் ராவ் பேசும்போது, "இந்த மாநிலத்தை கட்டமைப்பதில் ராமோஜி ராவுக்கு இருந்த தொலைநோக்குப் பார்வையைத் தொடரும் விதமாக, தலைநகர் அமராவதி கட்டமைப்புக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக 10 கோடி ரூபாய்க்கான காசோலையை அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்" என்று கூறினார்.
"அமராவதியை ஆந்திர மாநில புதிய தலைநகரின் பெயராக முதன்முதலில் பரிந்துரைத்தவர் ராமோஜி ராவ் தான்," என்று விழா மேடையில் பெருமிதத்துடன் கூறினார் கிரண் ராவ். "பொது வாழ்வில் நன்மதிப்பைக் கட்டிக்காக்கவும், எளிய மக்களின் நல்வாழ்வுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்பு உணர்வுடன் ராமோஜி ராவ் போராடினார்" என்றும் கிரண் ராவ் கூறினார்.
நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசும்போது, "ஈநாடு மற்றும் பிற ராமோஜி குழும நிறுவனங்கள் வியக்கத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளதற்கு பின்னால் ராமோஜி ராவ் என்ற மிகச்சிறந்த ஆளுமையின் கடின உழைப்பு உள்ளது. எனது தந்தை (ராமோஜி ராவ்) ஒருபோதும் விளம்பரத்தை விரும்பாதவர். அவரது விருப்பமெல்லாம், ஆந்திர மாநிலத்தின் புதிய அடையாளமாக அமராவதி நகரம் உருவாக வேண்டும் என்பதும், இந்தியாவின் வளர்ச்சியைக் காண வேண்டும் என்பதும் தான்.
எங்கள் குடும்பத்தினர் அனைவரும் அவரது முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுப்போம். கடந்த ஐந்து தசாப்தங்கள் அல்லது அதற்கு மேலாக, மக்கள் மீது இழைக்கப்பட்ட தவறுகளை சரிசெய்ய தன்னாலான அனைத்தையும் ராமோஜி ராவ் செய்தார். நாட்டின் எந்தப் பகுதியில் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதில் முதல் நபராக அவர் திகழ்ந்தார். அவரது குடும்பத்தினராகிய நாங்களும், ராமோஜி குழுமப் பணியாளர்களும் அவரது பாரம்பரியத்தை தொடர எங்களால் முடிந்த அனைத்தும் செய்வோம்" என்று செருகுரி கிரண் ராவ் உருக்கமாகப் பேசினார்.
இதையும் படிங்க: "ராமோஜி ராவுக்கு பாரத ரத்னா விருது" - ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை!