சண்டிகர்: மகாராஷ்டிராவில் சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு பிரபல பஞ்சாப் தாதாவான லாரன்ஸ் பிஷ்னோய்யின் கும்பல் பொறுப்பேற்றது. தற்போது லாரன்ஸ் பிஷ்னோய் கடந்த 2022 ஆம் ஆண்டு பயங்கரவாத வழக்குகளில் கைதாகி குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருப்பினும், பாபா சித்திக் படுகொலை, பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் என லாரன்ஸ் பிஷ்னோய் தலைப்பு செய்திகளில் பேசப்பட்டு வருகிறார்.
2022 ஆம் ஆண்டு ஜெய்ப்பூரில் உள்ள மத்திய சிறையில் லாரன்ஸ் பிஷ்னோய் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது, பஞ்சாப் போலீசாரின் கஸ்டடியில் லாரன்ஸ் பிஷ்னோய் இருந்தபோது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வீடியோ வாயிலாக லாரன்ஸ் பிஷ்னோயின் பேட்டி வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வந்த நிலையில், அதில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் ஏழு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க; 19 வயது கர்ப்பிணியை நண்பர்களுடன் சேர்ந்து கொன்ற காதலன்.. விசாரணையில் பகீர் தகவல்!
இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில், கைதிகள் செல்போன்கள் பயன்படுத்தி வருவதை கவனிக்காமல் இருந்ததால், டிவி-க்கு நேர்காணல் கொடுக்க வழி வகுத்துள்ளது எனவும் உயர்மட்ட கைதிகளை கையாளுவதில் அதிகாரிகளிடம் குறைபாடுகள் இருந்துள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், லாரன்ஸ் பிஷ்னோய் கஸ்டடியில் இருந்தபோது அலட்சியமாக செயல்பட்டதாக, பஞ்சாப் உள்துறை அமைச்சகம் இரண்டு துணை கண்காணிப்பாளர்கள் உட்பட 7 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. அவர்களில், டிஎஸ்பி குர்ஷர் சிங் சந்து, டிஎஸ்பி சமர் வனீத், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரீனா, ஜகத்பால் ஜங்கு, ஷகன்ஜித் சிங், முக்தியார் சிங், ஹெட் கான்ஸ்டபிள் ஓம் பிரகாஷ் ஆகிய ஏழு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்