பெரோஸ்பூர்: 18வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதில் 7வது மற்றும் கடைசி கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 தொகுதிகளுக்கு காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் தொகுதியில் பகுஜான் சமாஜ் கட்சி சார்பில் சுரிந்தர் கம்போஜ் போட்டியிடுகிறார். குருஹர்சஹாய் ஜீவா ராய் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் சுரிந்தர் கம்போஜ் தனது வாக்கினை பதிவு செய்தார்.
அப்போது தான் வாக்களிப்பதை வீடியோவாக பதிவு செய்த சுரிந்தர் கம்போஜ் அதை பொது வெளியிலும் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், அவர் மீது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக சுரிந்தர் கம்போஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரிந்தர் கம்போஜ் மற்றும் அவர் வாக்களிப்பதை வீடியோவாக எடுத்த நபர் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியின் ஜலால்பாத் தொகுதி எம்எல்ஏ ஜெகதீப் சிங் கோல்டி கம்போஜ் என்பவர் தந்தை சுரிந்தர் கம்போஜ் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப்பில் உள்ள 13 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: மிசோரம் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 30ஆக உயர்வு! - Mizoram LandSlide