வயநாடு: கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரு நாடாளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். நாடாளுமன்ற உறுப்பினராக தொடர அவர் ஏதேனும் ஒரு தொகுதியை கைவிடும் சூழல் இருந்ததால், வயநாடு தொகுதியி்ன் எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு நாடாளுமன்றத் தொகுதி காலியானது.
இந்நிலையில், வரும் நவம்பர் 13ஆம் தேதி வயநாடு தொகுதிக்கு நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ், எல்டிஎப் சார்பில் சத்யன் மொகேரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதனால் வயநாடு இடைத்தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். முன்னதாக, நேற்றே பிரியங்கா காந்தி தனது தாயும், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவருமான சோனியா காந்தியுடன் கேரளாவுக்கு வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து ரஷ்யாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது என்ன?
இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தனது தாய் சோனியா காந்தி, சகோதரர் ராகுல் காந்தி மற்றும் கேரளா காங்கிரஸ் நிர்வாகிகள் முன்னிலையில், பிரியங்கா காந்தி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதன் மூலம் பிரியங்கா காந்தியின் தேர்தல் அரசியல் பயணம் அதிகாரபூர்வமாக துவங்கியுள்ளது... அதனை தொடர்ந்து பிரியங்கா காந்தி வயநாடு மக்களின் ஆதரவை பெறவும், நன்றி தெரிவிக்கவும் பேரணி நடத்தவுள்ளார்.
வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர்களும் மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்களும் ஆதரவு தெரிவிக்க உள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்